கொஞ்சி விளையாடும் கோபம்:  கவிஞர் மஹாரதி

‘வரவர உன்கிட்ட
பேச எரிச்சலாயிருக்கு’
என ஆரம்பமாகும்
உன் உரையாடல்
காலவெளி கடந்துப் போகிறது
நுரைகடல் உறைந்தது போலான
வெண் பஞ்சுக்குவியல் வானத்தின்
தொலைதூரப் புள்ளியாய்
ஊர்ந்து போவது

போர் விமானமா, பறவையா என
நின்று வெறித்துக் கூர்ந்துப்
பார்க்கையில்
என் பிடறியில் கொதிக்கிறது
சூடான உன் சுவாசமும்
அமில நாவும்
‘பதில் சொல்லு’ என்கிறாய்
கேள்விகளுக்கான
பதில்களை எல்லாம்
உன் கண்களில்
ஒளித்து வைத்துக் கொண்டு
என்னைத்தேடச் சொல்கிறாய்

தூரத்தே ஒருவன்
மாயமான் பின்னால்
ஓடிக் கொண்டிருக்கிறான்
ஆணையிட்டு ஆணை இம்சித்த
தோரணையில் ஒருத்தி
என் குழந்தைக்கு உன் ஞானத்தால்
உயிர் கொடு என புத்தன் முன்
நின்ற அந்தப் பெண்ணைப் போலவே
நீயும்….

’உன்மீதிருந்த நம்பிக்கை அற்றுப் போனது’
என நீ சொல்லிவிட்டு
பிரியப் போன கனமான கணத்தில்
என் முடியில் உன்விரல்கள் ஊர்ந்து செல்ல
திரும்பி வந்துக் கேட்கிறாய்:
‘நாளைக்கு எப்படா செல்லம் வர்ற?’

நீ தேவதையா, சாத்தானின் சகோதரியா?
கோபம் எப்போதும் அரிவாளோடு
தலை விரித்தாடும்
உன் கோபம் மட்டும் ஏன்
புல்லாங் குழலோடு
கொஞ்சி விளையாடுகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com