கடந்த வாரத் தலைப்பு ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!

பங்குவைத்து உண்டு பாசத்தை பகிர்ந்தோம் பசியையும் மறந்து பறவையாய் திரிந்தோம்
கடந்த வாரத் தலைப்பு ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்!

பால்ய வீதியில் 

ரீங்கார வண்டுகளாய்
காடுமேடு சுற்றினோம்
கால்கடுக்க நடந்தோம்
களைப்புத் தெரியவில்லை
களிப்புதான் இருந்தது.

எண்கணக்கு எளிதில் சொல்லும்
எண்ணற்ற வித்தைகளை
அடிவாங்கி உதைவாங்கி
அழுது கற்றுக்கொண்டோம் 
ஆயினும் ஆசானென்றால்
பயபக்தி கொடுத்து வளர்ந்ததை
மறுக்க முடியுமா..?

இரவின் மடியில் மல்லாந்து படுத்து
ஆகாய விண்மீன்களை
பல நாட்கள் எண்ணிய அனுபவங்கள்
அத்தனையும் மறக்க முடியுமா...? 

தீப்பெட்டிகளை நூலில் கட்டி 
நண்பனிடம் பேசி மகிழ்ந்த
அந்த அனுப இன்பங்களும்
இன்றைக்கு இருக்கும் ஆயிரம் 
திறன்பேசிகளைக்கொண்டு
ஈடுசெய்ய முடியுமா..?

பள்ளி விடுமுறையென்றாலே
பாட்டி, தாத்தா. அத்தை, மாமா
உறவுகள் என்று அவர் வீடு தேடி
ஓடி ஆடிய உல்லாச நினைவுகள்
தொலைத்த பால்ய வீதிகளை
இன்று தேடி அலைகிறேன் எங்கெங்கோ
என் பிள்ளைகளை அழைத்துச்செல்ல
அது மீண்டும் கிடைத்தால்
நான் கூட இன்று சிறுவன்தான்!

- கவிஞர் பி.மதியழகன்

**
பால்ய வீதியில் சிறகுகள் விரிந்து  
பால் நிலா சிரிப்பில் பகையுமழிந்து 
நெஞ்சகச் சாலையில் நேசம் நிரம்பி 
வஞ்சகமில்லா வாழ்வும் வரமாய் வசப்படும்!

அரும்பிடும் மொட்டுகள் அந்தில் அணியாக 
விரும்பிடும் வண்ணம் விழிகளும் மணியாக
அரிலில்லா அளியை அளாவிடும் உறவுகள் 
ஆவளியில் சேர்ந்திடும் மேகலைகளாய் ஆடிடும்!  

இனமதில் பேதம் எழுந்து நடந்திடும் 
இதயச் சலனமும் அனிச்சையாய்க் கடந்திட
நினைவுகள் நீந்திடும் ஈரத் தடங்களில் 
கனவுகள் செழித்துக் கடிமலர்க் காடுமெழும்!

- மு. திருமாவளவன், அறிவியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர்

**

பிறந்த  மனிதனின் 
சிறந்த  பருவம் 
பால்ய பருவம்!
கவலையின்றி  ஆடிப்பாடி 
பள்ளிக்கு  துள்ளி குதித்து 
கள்ளமில்லாமல் 
அள்ள அள்ள குறையாத 
ரசிக்க  வைக்கும்  
உன்னத  பருவம்!
வீதியில் நடமாட  
சட்டமுண்டு.........
திட்டமில்லா  பால்ய வீதியில் 
வட்டமிட்டு மகிழலாம்!
ஓடிப்  போன நேரம் வராது  போல
தேடிப்போனாலும் கிடைக்காத 
மூடிவிடும்  பால்ய வீதியில் 
வாடி விடாமல்   ஆடி விளையாடு! 
கோடி முறை சொல்வேன் 
"பால்ய வீதியே!................
நீ வாழ்க.........என்று!

- உஷா முத்துராமன், மதுரை   

**

பால்ய வீதியில்
பார்க்கின்ற பார்வையில்
எத்தனை எத்தனை இன்பங்கள்
எனக்குள் வைத்தாய் ஈசனே!

வாசத்தலங்கள் நமக்குள் ஒன்றான கருவறையானதால்
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்றென்றே
குவலயம் மகிழ்ந்தது ஈசனே!

மறக்காமல் மறந்துவிட்ட
மறுக்க முடியாத உண்மைகளும்
காமக் குரோத எண்ணங்கள்
கடுகளவும் தீண்டாத
புதுமை பால்வெள்ளை மனமும்
பால்வீதியில் பதித்த ஈசனே!

தந்தை முகம் தாயின் முகம்
தளர்ந்து போன தாத்தா முகம்
பாட்டி முகம் பதிய வைத்தாய்
பாசத்திலே உதிரம் வைத்தாய்
பாரபட்சம் இல்லாமல் வாழ
பரந்தமனம் தந்தீர்கள் ஈசனே!

பால்ய வீதி மாறிப்போச்சு
பரந்தமனமும் மறைந்து போச்சு
பாசக்கயிற்றில் உயிரும் போச்சு
பரமன் துதிக்கும் பழக்கமும் போச்சு  ஈசனே!
பழைமை மாறாத பால்வீதி
புதுமையுடன் படைத்துவிடு 
குழந்தைத்தனம் மாறாத
குற்றமற்ற நல்லுலகம்
உருவாக்கி மகிழ்ந்து விடு
உலகாளும் எங்கள் ஈசனே!.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை.

**

பால்காரர் பாம் பாமென்று ஒலியெழுப்ப,
சொம்பிலே பால்

தயிர்காரர் மோரு மோருனு கூவ,
வாயில் வெண்ணை;
கிண்ணத்தில் தயிர்

தண்ணி வந்திருச்சு வான்னு அழைக்க,
தெருக்குழாயில் தண்ணீர்

நம் தெருவில் வசிப்பவருக்கு
ஒன்றென்றால்,
அவருக்காக கண்ணீர்

ரேசன் கடைக்கு போன அம்மா வர நேரமானால்,
ஜெயந்தியக்கா வீட்டில் சுடுசோறு சாம்பார்

வெய்யில் காலத்தில்,
வேப்ப மரத்து காத்து;
குளிர் காலத்தில்,
காதை மூடும் கம்பளி

தீபாவளியில்,
வெங்காய வெடி;
ஆடியில்,
மாரி தேர்வடத்தைப்பிடி

பொங்கலில்,
கரும்பைக்கடி;
மாசியில்,
காளி குண்டம் மிதி

மயான கொள்ளைக்கு முன்,
மோட்டுக்கொப்பரை;
காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்,
தெருவெல்லாம் உற்சாகம்

சச்சின் டெண்டுல்கர்,
ஆட்டம் பார்க்க;
எல்லோருக்கும் 
நாட்டம்

எல்லா பண்டிகையும்,
நமக்கே;
வாழ்க்கை வாழ்வதற்கே

பண்டிகை போனாலென்ன,
மீதியுள்ள நாட்கள்;
அதைவிட அருமையானது

மாலை ஏழு மணியானால்,
ஒலிக்கும் கைதட்டல்;
அது நண்பர்களின் அழைப்பு

புத்தகத்தை எல்லாம் தூக்கியெறிந்து,
தெரு நண்பர்களோடுவிளையாட்டு

அடுத்த நாளைக்கு மிச்சம் வைக்காமல்;
அனுபவித்த சந்தோசம்

யாரென்று பார்க்காமல்,
எல்லோருடனும்
நேசம்

ஒவ்வொரு மாலையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்;
அதை ரசிக்கவே வீட்டு வாசலில் அம்மாக்கள் கூட்டம்

அப்பா வந்தாச்சு,வா உள்ள,
நீ போம்மா , நான் வரேன்,
இன்னும்கொஞ்ச நேரம்,
வெளாண்டுட்டு வரேன்.

- ம.சபரிநாத்,சேலம்

**

உங்கள் குழந்தைகள் 
உங்கள் குழந்தைகள் அல்ல 

உங்களால் வந்தவர்கள் அல்ல 
உங்கள் வழியில் வந்தவர்கள் 

உங்கள் அன்பை அவர்களுக்கு 
ஊட்டுங்கள் எண்ணங்களை அல்ல 

உங்கள் அறவணைப்பை காட்டுங்கள் 
உங்கள் அதிகாரத்தை அல்ல 

அவர்கள் எண்ணங்கள் முற்றிலும் 
வேறு; உங்களால் அவற்றை; 

தொடக்கூட முடியவே முடியாது 
இவை படித்ததில் பிடித்தது

ஐந்து வயதிற்கு அப்புறம் அறிவுக்
கண்கள் திறந்து நல்லதோ தீயதோ 
ஆழ் மனதினிலே பதிந்து விடும்

நூறு வயதை தாண்டிய போதும் மாயாது துளிரும் பால்ய வீதியில் 

தனிமையை சந்திக்கும் சமயங்களில் 
சூழ்நிலைகள் குணங்களை மாற்றும் 

நடந்து வரும் பாதைகளே நேற்று 
இருந்ததை இனி இருக்க ப்போவதை
வகுத்து நல்லவரோ தீயவரோ ஆவர் 

சமூகத்தின் கண்ணுக்கு தென்படும்
ஒதுக்கி வைக்க முற்படும் அல்லது 
தலைவனாக்கி புகழாரம் சூடிடும்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை மகாராஷ்டிரா

**

பார்க்கின்றேன் நான் வந்த பாலியத்து வீதிதனை
கள்ள மற்று நெஞ்சங் களிக்க விளையாட்டு,
உள்ளம் முழுதும் உவகை, ஒரு தீங்கறியா
வெள்ளை மனம் அங்கே விகற்பமிலாச் சிந்தனைகள்
எள்ளத்தனையும் இதயமதில் துன்பமிலாத்
துள்ளல், துடிப்பு, சுகதேகம் சோர்வறியாப்
பள்ளிப் பருவம் படிக்க மட்டும் ஆர்வமின்மை

என்றிவ்வாறாக என் வாழ்வு ஓடியதும்
ஒன்றொன்றாய் வாழ்வு உருமாற்றம் பெற்றதுவும்
கால நதியிற் கரைந்தெனது உள்ளத்தின்
சீலமெலாம் மாறி சிந்தனையுள் பெண்ணாசை
பாலுணர்வு, காதல், பழக்க வழக்கமெனும்
பல்வேறு கெட்ட பகைகள் வந்து சேர்ந்ததுவும்
எண்ண மனதில் இன்றும் கனக்கிறது.

பால்யத்து வீதியிலே பழையபடி போகவொண்ணா
ஒற்றைவழிப் பாதையில்நான் ஓடிவந்து நிற்கின்றேன்
இற்றை நிலைக்கும் இனிமேல் வரப்போகும்
முற்றிப் பழுத்த முதுமைதரும் தீரா நோய்
உற்றுப் பிறரின் உதவியின்றி வாழவொண்ணா (து)
ஏங்கும் நிலைக்கும் இறப்பை எதிர்பார்த்துத்
தூங்கும் நிலைக்கும் தூரம் அதிகமில்லை.

ஒற்றைவழித் தடத்தில் உயிர் பிரிந்து போம்வரைக்கும்
காத்து நிற்க வேண்டும், கடைசி வரை மூச்சிழுத்துப்
பார்த்திருக்க வேண்டும், பாசக்கயிற்றோடு
காலனிடைப் புகுந்து கணக்கை முடிப்பதற்காய்
தேடிடவும் கூடும்,  தேடிப் பிடித்துடனே
ஆளிவர்தான் என்று அவன்கயிற்றை வீசுகிற
வேளை வரைக்கும் வீண்கவலை வேண்டாமே.

- எஸ் கருணானந்தராஜா

**

மழலை மாறா முகத்துடன்
மலர்ந்து விரிந்ததும்
மனதிலே அச்சமேதுமின்றி
மண்ணிலே  அகரமெழுதியதும்

சின்னச்சின்ன சேட்டைசெய்து 
சிட்டாகப்    பறந்ததும்
சினம் கொண்ட சுற்றத்தின்
சிந்தையதைக்  கவர்ந்ததும்

கற்பனை  ஊற்றெடுக்க
கனவுகளுடன் கைக்கோர்த்ததும்
கள்ளம் கபடமின்றி
கடவுளாகத்   தோன்றியதும்

காலம் பல கடந்தும்
கண்முன்னே விரியுது...
பாசமான நட்புடன் 
பயணித்த பால்யவீதியது.....

- ஜெயா வெங்கட்

**

பாலிய வீதியிலே கற்றது 
கைமண் அளவு கல்லாதது 
உலகளவு!
மூன்று வயதில் தாயின் 
கை பிறிய மனமில்லாமல் 
பள்ளிக்கு செல்ல துவங்கியதும்,
ஆறு வயதில் தன் பேனாவையும் 
பென்சிலையும் காட்டி பெருமைபடுவதும்,
ஒன்பது வயதில் தன் 
சிற்றுண்டியை பகிர்ந்து 
மகிழ்வதும்,
பன்னிரண்டு வயதில் தோழிகளில் தானே 
அழகு என்ற அகம்பாவமும் தோழர்களில் 
நானே மிடுக்கன் என்ற கர்வமும்,
பத்தாவது தேறிய15-வது வயதில் 
எனக்கு நிகர் நானே என்று 
தன்நம்பிக்கை தலைதூக்குவதும்,
காதல்வயப்படும் பதினாறில் 
சக மாணாக்கர் தன்னையே பார்கின்றனர் 
என்று பெருமிதம் கொள்வதும்,
பதினேழில் மீண்டும் சந்திப்போமா 
என்ற எண்ணத்தோடு 
பறந்துவிறிந்த வானில் பறக்க தயாராகி 
இதுவரை, என்ன நடந்தது,ஏன் நடந்தது,
எப்படி நடந்தது, எதற்கு நடந்தது என்று 
பல கேள்விகளுக்கு விடை விளங்கியும் 
விளங்காமலும், 
புத்தக பாடத்தை கற்று, வாழ்வின் 
பாடம் கற்க பறக்கும் இந்த பால்ய வீதியே இளமை பருவம்.
இதில் நாம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு!

- பிரியா ஸ்ரீதர்

**

பறவையாய்ப் பறந்து திரிந்து
பம்பரமாயச் சுழன்று ஆடி
பாசமான நட்புடன் கைகோர்த்து
பால்ய  வீதியில் விளை யாடியதை...

கள்ளம் கபடம் இல்லாத
பள்ளிப் பருவத்தை..
புத்தகச் சுமை  இன்றி
புழுதியில் புரண்ட.தை...

மழைநீரில் காகிதக் கப்பலும்
வெய்யிலில் காற்றாடியும் விட்டதை...
பரமபதமும் பல்லாங் குழியும்
பயிற்றுவித்த பாடத்தை..

கண்ணிமை எனக்   காத்து
கதை சொன்ன பாட்டியை..
திண்ணையில் அமர்ந்து அன்று
திருவாசகம்படித்த தாத்தாவை..

சிந்தையை சிறை பிடிக்கும்
விந்தைமிகு கணினி உலகில்
பயணி க்கும்  இன்றைய
பாலகர் அறிவாரோ ?

- ருக்மணி, கோவை 

**

ஜாதி என்பது எங்களுக்கு தெரியாது
மதம் என்பது எங்களுக்கு புரியாது

தீவிரவாதத்தை நாங்கள் அறியமாட்டோம்
பாலியலை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்

சமுதாய சீர்கேடு எங்களுக்கு தெரியவே தெரியாது
பொறாமை என்பது எங்களிடம் இல்லவே இல்லை
கோபம் எங்களுக்கு வரவே வராது

அரசியல் என்பது என்ன ?
கலவரம் என்பது எங்கே ?

கள்ளத் தனம் ஏதுமில்லை 
பழிவாங்கும் எண்ணமில்லை
பிரச்சனை ஏதுமில்லை

எங்களுக்கு தெரிந்ததெல்லம்
தாத்தா, பாட்டி
அன்னை, தந்தை
அண்ணன், அக்காள்
தங்கை, தம்பி உறவுகள்
அதையும் தாண்டிய நண்பர்கள்

அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி
அடம்பிடித்தல், உணவுப் பண்டம்
விளையாட்டு, விளையாட்டு பொருட்கள்

சண்டையிட்டாலும் இணைந்து கொள்வோம்.
இணைந்து கொண்டாலும் சண்டையிடுவோம்

இந்த பால்ய வீதி - வாழ்க்கை முழுதும் தொடருமா ?
என்ற ஏக்கத்தில் நாம் !

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

பால்ய வீதியில் ....
காண்பதெல்லாம் பரவசமே 
கண்டதெல்லாம் சொர்க்கமே 
கற்பது தான் எதிர்காலமே 
கற்றவழி நிற்பது எதிர்காலமே 

திரும்பி வராத சொர்க்கங்கள்  
அரும்பும் மீசைக் கனவுகள் 
விரும்பிடும் வண்ணப்பூச்சிகள் 
விரிந்திடும் ஞானத்தேடல்கள் 

தீயது விலக்கி நல்லது கற்றிடு
மானென துள்ளி சிகரம் தொடு 
அறிவுத்தேடலில் ஆற்றல் பெருக்கிடு....

- பாலா கார்த்திகேயன் 

**
பால்ய வீதியை கடக்காதோர் யாருமிலர்!
அதில் பயின்றவர் வீணாய் போனதிலர்! 

வறுமையை சந்தித்திருந்தால் சம்பாதிக்க பயில்வாய்!
பெருமையை சந்தித்திருந்தால் சமகாலத்தில் தங்கி நிற்பாய்!

பயிற்சி எடுத்திருந்தால் சிகரம் தொடுவாய்!
படுத்து உறங்கியிருந்தால் சில சுற்று வளர்வாய்!

எதுவுமே வீணல்ல உபயோகபடும் வரை!
எதுவுமே வீண்தான் உபயோகப்படாத வரை!

பால்ய வீதியில் விழுந்து, எழுந்து நடந்து, கடந்தால் பின்பு சுலபம்!
பால்ய வீதியில் படுத்து, உறங்கி, சோம்பித்திரிந்தால் பின்பு கடினம்!

இந்தியா உயரும் என்பது பால்யவயதினரின் உழைப்பின் கனவில்!
வாரிர் உறக்கம் விழித்து நாட்டை உயர்த்தும் பணிபுரிவோம் வாரீர்!

விழி.எழு.விருட்சமாகுக!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**
ஆற்றங்கரையில் கட்டிய  மணல் வீட்டை 
 ஆற்றலைகள் அடித்துச் செல்கையில் 
     மனம் மகிழ்ந்து அதைப் பார்த்து  நின்றோம்
அடுத்த நாள் அதைவிடப் பெரிய மணல் வீட்டை
       அழகாய்க் கட்டலாமென்ற நம்பிக்கையில்

உருட்டி விளையாடும் இரு நுங்கு உருளை வண்டி
   ஓட்டி ஓட்டி இரண்டாய்ப் பிரிந்த வேளையில்
        மனம் மகிழ்ந்து அதைப் பார்த்து நின்றோம்.
மறுநாள்  இருபுது நுங்கையெடுத்து புது வண்டிதனை
           மறுபடியும் செய்திடலாமென்ற நம்பிக்கையில்

கூடிக்கூடிக் கோலி விளையாடுகையில் தோற்றாலும்
         வென்றலாம் கூடித் தின்றோம் கடலைமிட்டாய் 
           காக்காய்க்கடி, கடித்தே கவலையெதுமில்லாமல்  
குழவிப்பருவத்தில் குலவி அன்பாய் இருந்தோம் நாளும்
            நம்பிக்கை வளர இன்பம் எப்போதும் இருந்தது  

- மீனாள் தேவராஜன்

**

அரைக்கால்    சட்டையுடன்
 அடுத்தவீட்டுச்    சிறுவருடன்
உரையாடி   நடந்துபள்ளி
 உளம்மகிழ    சென்றநாள்கள் !

பள்ளிநுழை   வாயில்முன்
 படர்ந்தமர    நிழலின்கீழ்
நெல்லிக்காய்    கூறுகட்டி
 நிலம்மீது    அமர்ந்தபடி 

வறுத்தநிலக்    கடலையொடு
 வறுக்காத   நாவற்பழம்
சுருக்குப்பை   பாட்டிவிற்க
 சுவையாக    உண்டநாள்கள் !

மிட்டாயில்    கடிகாரம்
 மிடுக்காகக்    கையில்கட்டி
கெட்டியான     கமர்கட்டைக்
 கேட்காத   நண்பனுக்கும் 

காக்காகடி    கடித்தளித்துக்
 கரம்கோர்த்து    நின்றதெல்லாம்
ஏக்கத்தை    நெஞ்சிற்குள்
 ஏற்றியது;  பேருந்தில் 

பூட்டிவிட்ட    சீருடையில்
  புத்தகங்கள்    பொதிசுமந்து
போட்டடைத்த    பொட்டலமாய்ப்
  பேரன்தான்    சென்றகாட்சி !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

மூக்கை
சிந்தத் தெரியாத வயதில்
ஒற்றை விரலை கைகள் பிடித்து
வீதி நடக்கையில்...

பொத்தான்கள் விடுபட்ட
சட்டையோடு
அரைக் கால்சட்டையில் விழுந்த
பொத்தல்களை மறைக்க முடியாமல்...

நைந்து
கிழிபட்ட மேலாடையுடன்
பாவாடை விரிச்சலில் நுழையும்
கண்களுக்கு முன்னால் கூனி குறுகி...

பசியும்
பள்ளிக் கல்வியும் குடியிருப்புமென
நிறையும் வாழ்க்கையென
நம்பித் தொடர்ந்த பாதையற்ற
சாலையில்...

யாவரும் நிகரென
விளங்கவும்
கீழ்மை மேன்மையற்ற சமத்துவம் நிலவவும்...

உடைமைகள் இழந்து
உரிமைகளைக் கொண்டாட தம்
உடல் பொருள் ஆவி
யாவும் அர்ப்பணித்து
ஆர்ப்பறித்த காலத்தின்
தியாகப் பருவத்தில்
உழைத்து...

எல்லார்க்கும் எல்லாம்
என்பதெல்லாம் பொய்த்து
மெய்யற்ற பொய் விரல்களில்
சுழன்று கொண்டிருக்கிறது 
இடம் மாறிய
விடுதலையின் சாவி...

தியாகிகளின் கண்களில்
இன்னும் தெரிகிறது
ஆறாம் பூதமான மத மொழிகளின்
வன்மங்களும்
பால்ய வீதியில் மாறாத நிலைகளும்...

இருந்து கொள்ள முடியாமல்
வீதி தோறும் அலைகிறது
ரத்த வாடையுடன் சுதந்திரம்...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

அது ஒரு பால்வெளிப்   பயணம்
சென்றுவிட்டால் மீள்வது கடினம்
பயணித்ததை யாரும் மறந்துவிடமுமில்லை
தொலைவுகள் தெரியாமல் தொலைந்துபோய் 
வானம் வசப்பட்ட வேளை அது.
விளக்குவதற்கு அருஞ்சொற்பொருளும் இல்லை
கிழிந்த டவுசரை பிடித்து டயர் ஒட்டிய
நினைவுகள் தேன் மிட்டாயாய் நெஞ்சில் கசிகிறது.
பிலிம் பார்த்து கதை சொன்னது
நினைவுத் திரையில்  காவியமாய் ஓடுகிறது. 
வருடங்கள் ஓடி எல்லாமும் பெற்றுவிட்டோம்
பால்யம் ஒன்றை தவிர... 

- எம்.  விக்னேஷ் 

**

ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் 
அன்று அழகாக சிரித்து மகிழ்ந்தோம் !

காக்கா கடி கடித்து  மிட்டாய் பகிர்ந்தோம் 
கள்ளம்  கபடமின்றி விளையாடினோம் !
.
சாதி மதம் அறியாது எல்லோரும் 
சகோதரர்களாய் பழகி மகிழ்ந்தோம் !

பண்டிகை உணவுகளைத் தந்தோம் 
பாசத்துடன் பழகி வந்தோம் !

கவலை என்றால் அறியாத காலம் 
களிப்புடன் கொண்டாடிய காலம் !

மணலில் வீடு கட்டி மகிழ்ந்தோம் 
மனதில் கோட்டை கட்டி வாழ்ந்தோம் !

கபடி விளையாடிய காலம் உண்டு 
கிட்டிப்பில் விளையாடிய காலம் உண்டு !

காலையில் சண்டை என்றால் உடன் 
மாலையில் சமாதானம் ஆயிடுவோம் !

நொங்கு பதநீர் குடித்து மகிழ்ந்தோம் 
நொங்கு வண்டி உருட்டி விளையாடினோம் !

டயர் வண்டி ஒட்டி மகிழ்ந்தோம் 
போடி வாடி பேசி மகிழ்ந்தோம் !
 
அலைபேசியில் விளையாட்டு இன்று 
அறைக்குள்ளே விளையாட்டு இன்று !

அதோ ஒரு நிலாக் காலம் உண்மை 
அந்தோ போனதே திரும்ப வராதே !

- கவிஞர் இரா .இரவி

**
பால் மணம் மாற
பாலகனாய்;
பாலினமறியா
பாசப் பறவைகளாய்;
கூடித் திரிந்து
வீடு கட்டி
சோறாக்கிய விளையாட்டு ம்;
விளையாட்டில் சேர்க்கல
எனும் பரிதவிப்பும்;
மழையில் கப்பல் விட்டதும்;
மண் மணம் மாறா
மழலையாய்; பேச்சிலும்
மூச்சிலும்; கெஞ்சலும்
கொஞ்சலும் கொண்ட
மல்லிகை அரும்புகளின்
தோரண வாயில்கள்;
துவண்ட மனதிற்கு
துடிப்பைத் தரும்
கரும்புப் பருவங்கள்
கூத்தாடும் மேடை;
நஞ்சு வஞ்சமில்லா
நர்த்தன ஓடை...

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

சிறுபாதங்களின் முத்தத்தால்
சிலிர்த்த
பால்ய வீதி
பள்ளிக்கூடம் ஆயின எங்களுக்கு

பீங்கான் கோப்பையும்
குண்டு பல்புமாக ஒளிசிந்திய
தெருவிளக்குக் கூடுகளில்
சிட்டுக்குருவிகள் குடியிருந்த போதே
தெரிந்துகொண்டோம்
சிற்றறையிலும் வாழ்ந்து களிக்க

கண்ணாமூச்சி ரே...ரே...
காட்டுப்பூச்சி ரே...ரே... என
ஒளிந்து விளையாடிய போதே
உணர்ந்துகொண்டோம்
வெற்றியின் ரகசியத்தைக் கண்டறிய

பால்வேறு பாடின்றி
பால்ய நாட்களில்
ஒருகாலில் 
சில்லு விளையாடிய போதே
தெரிந்துகொண்டோம்
ஊனத்தை வெல்லும் உத்தியை 

சாட்டையைச் சுற்றிப் பம்பரத்தைச்
சுழல விடும்போதே
அறிந்துகொண்டோம்
ஆட்களை
ஆட்டுவிக்கும் நிர்வாகக் கலையை

மூச்சு விடாமல் பாடியும்
மொத்த நபர்களை ஒருங்கிணைத்தும்
கபடி ஆடிய போதே
கற்றுக்கொண்டோம்
கூட்டுப்பணியின் சூத்திரத்தை

- கோ. மன்றவாணன்

**

பள்ளி காலம்
வேலி தாண்டிடும் 
தோள்பை கால்கள் நண்பனோடு! 

வழியோர வீட்டு 
மதில் மேல் தாவிடும்! 

மரத்து கனிகளை 
டவுசருக்குள் நிறைத்திட! 

கிளை அசைவு 
உரியவர் காது தொட! 

அதட்டல் சத்தம்
ஓட்டம் எடுத்திடும் 
பாதி பை நிரப்பிக்கொண்டு! 

நட்புகளுடன்
நாட்கள் நதியாய் நகர்ந்திட!

ஆண்டுகள் 
பல கடந்த பின் 
பால்ய வீதியை
பார்த்துக்கொண்டே
பெற்ற பிள்ளைகளை
பள்ளி அழைத்து செல்கிறேன்!

போட்ட குறும்புகளை நினைத்துக்கொண்டே 
கண்கள் ஈரமாய்
கன்னங்கள் அருவியாய்!!! 

- தஞ்சை. ரீகன்

**
பால்யகாலந்தொட்டே கூடவே பயணித்திடும் தினமணிக்கு கவிதைசூட்டுவதை எண்ணி மகிழ்கின்றேன்! அச்சில் வந்தால் ஆனந்தம்!

பால்யவீதியில்! 

நாலணாவிற்கு தேன்மிட்டாய்
நான்கெட்டில் அத்தைவீடு
நகர்வலம்வர வாடகை சைக்கிள்
நீட்டியுறங்க நொச்சிநிழல்!

திருவிழாக்காலத் தெருக்கூத்து 
திண்ணைக்கிழவிகளின் தெம்மாங்கு
தீராமழையைத் தாங்கும்குழி
தூரத்துக்கண்மாயின் ஒற்றைவழி!

மஞ்சள்நீரன்றைக்கு மறையக்கூண்டுகள்
அஞ்சல்பெட்டிக்கம்பத்து கரையான்கூடுகள்
எஞ்சிய காலங்களுக்கு ஞாபகவூர்தி - இனி
எப்போது போவேனோ, என் பால்யவீதி! 

- கிருஷ்ணபிரசாத், பெங்களூரு

**
சின்னச் சிட்டுகளாய் சிறகடித்திருந்தோம்
கன்ன மொட்டுகளில் கள்ளமில்லாச் சிரிப்பு
அன்ன நடையின்றி ஆரவாரக் குதிப்பிருக்க
மன்னர்களாய் மனங்களை ஆட்சி செய்தோம்

சோதர அன்பில் முங்கிக் குளித்திருந்தோம்
ஆதரவுக் கரங்களில் கட்டுண்டுக் களிப்புடன்
மோதலின்றி முகிழ்ந்த நட்புச் சுரங்கங்களாய்
நாதகீதமிசைத்து நன்னெறி கற்றிருந்தோம்

ஓடி விளையாடி ஓய்ந்திருக்காமலிருந்தோம்
கூடிக் கும்மாளமிட்டு மகிழ்ச்சியில் குளித்து
தேடிச் சேர்ந்த அறிவுரைகள் வழி நடந்தே
கோடியின்ப லயிப்பில் துன்பமறியாதிருந்தோம்

ஆல்போல் விழுதுகளாய்க் கூடி வாழ்ந்திருந்தோம்
சூல் கொண்ட மேகங்களாய் உதவிகள் செய்து
பால்வடியும் முகங்களில் சிரிப்புச் சுரங்கங்களாய்
பால்யவீதியில் பாடிடும் பறவைகளாயிருந்தோம்

கவிஞர்  ராம்க்ருஷ்

**

பால்ய வீதியில் பட்டாம்பூச்சி பிடித்தோம்
பம்பரம் விளையாடி நட்பையும் வளர்த்தோம்
கண்ணாமூச்சி விளையாடி கவலைகளை மறந்தோம்
காலங்கள் அழகிய கோலமாவதை அறிந்தோம்
புழுதியில் விளையாடி புதுவாழ்வு கொண்டோம்
புத்தகப்பையை பள்ளிக்கு சுகமாய் சுமந்தோம்
பாடங்கள் படித்து தெளிவை அடைந்தோம்
பள்ளியை கோவிலாக தினமும் தொழுதோம்
நுங்குவை சக்கரமாக்கி வண்டியை ஓட்டினோம்
நூலில்கட்டி பட்டத்தை வானத்தில் ஏற்றினோம்
பங்குவைத்து உண்டு பாசத்தை பகிர்ந்தோம்
பசியையும் மறந்து பறவையாய் திரிந்தோம்
சாதிகளை மறந்து ஒன்றாகக் கலந்தோம்
சகிப்புத்தன்மை அறிந்து பகைமை மறந்தோம்
வஞ்சக நெஞ்சமின்றி வண்ணமாய் வாழ்ந்தோம்
வாழ்வை வசந்தமாய் நாளும் கழித்தோம்
இளமைப்பருவம் என்பது இறைவன்தந்த அருள்தான்
இன்பவாழ்வு என்னும் பயிருக்கு அதுஉரம்தான்
பிள்ளைப்பருவம் என்பது பிழையற்ற பருவம்தான்
பிள்ளையாய் மாறநானும் கேட்கிறேன் ஒருவரம்தான்

- கவிஞர் நா. நடராசு

**

பால பருவத்தில், வீதியில் துளிர்த்து 
படித்த பள்ளியில் அரும்பி , கல்லூரியிலும் 
மலர்ந்து செழித்தது எங்கள் நட்பு !
நானும் அவனும் பால்ய நண்பர்கள் 
என்னும் ஒரே ஒரு பிணைப்பு 
இணைத்து விட்டதே  எங்களை 
இன்று வரை ! 
வீதியில் விளையாட்டாய் துளிர்த்த  நட்பு 
வாடவில்லையே இன்னும் !மணக்குதே 
இன்றும்! காரணம் என்ன ?
என் வாழ்க்கை வீதியில் முளைத்த பிற 
நட்புகள் பல வெறும் "ரயில் நட்பாய் "  
மாறிய காரணம் என்ன ?
இனம் ,மதம் ,குலம்  மறந்து என்  நண்பனுடன் 
கை கோர்த்து ஓடி  விளையாடிய 
அந்த பால்ய வீதியை இன்று தேடுகிறேன் 
நான் !  என் கேள்விக்கு விடை தேட !

- கே.நடராஜன் 

**

மழைச்சாரல்.
உணர்வுகள் கரைந்த நினைவுகள்.
உள்ளமெங்கும் சித்திரங்கள்.
நனைந்து எழும் மண்வாசனையில்
சித்திரங்களை மெல்லத்துலக்கிக் 
கோர்த்துப் பார்க்கிறேன்.
கண்ணீரும் சிரிப்பும் கள்ளமின்றிக்
கொட்டித்தீர்த்த நாட்கள்.
பெரும் குடும்பம் சிறு வீடு.
உள்ளங்களை நெருக்கி 
வேய்ந்த‌ கூரைகள்.
தொலைக்காட்சி வைத்திருந்த 
ஒன்றிரண்டு அரண்மனைகள்.
வண்டிமாடுகள் சத்தமிட்ட‌ 
வழித்தடங்கள்.
வாரச்சந்தையன்று விடுமுறை
என்ற சிறுநகரம்.
எதிர்வீட்டு கெளரி அக்கா
அவள் வருடிப்பூத்த‌ 
பனிக்காலத்து பவழ‌மல்லி.
தேரோடிய‌ திருவிழாக்கள்
உப்பும்மிளகும் போதுமென்ற சாமியவள்.
சாமியவள் பேரைச்சொல்லி
திருவிழாவின் கறிச்சோறு.
மஞ்சாரைப்பூச் சிதறிமணக்கும் 
பள்ளித்தடங்கள் இளவேனில்காலம்.. 
தீபாவளிக்கு மறுநாள் கட்டாயம் 
சீருடைகள்.
பள்ளிகள் உடுத்திச் சொன்ன 
நீலவெள்ளைச் சமத்துவங்கள்.
சிலவருடங்கள் தீபாவளிக்குப்
புத்தாடையே சீருடைகள்.
பாவாடைச்சட்டையில் பறந்துகளித்த‌ 
பட்டாம்பூச்சிகள்.
கிழங்குவிற்கும் புங்க‌மரத்துப் 
பாட்டியிடம் கணக்குப்படித்த நாட்கள்.
கள்ளமில்லா நட்புக்கள்.. 
உயிரோடிய‌ உறவுகள்..
இல்லாதது தெரியாமல் 
இருந்தது புரியாமல்
வாழ்ந்திருந்த‌ பெருமகிழ்வுநாட்கள்.
இப்படி
வசந்தகாலத்தின் குறிப்புக்களே 
பால்யவீதியெங்கும்.
பால்யவீதி எங்குமுடிந்தது ?
இல்லாதது வலித்தபோதும் 
இருந்தபொருளே அடையாளமானபோதும்
பால்யவீதி விலகி 
வெகுதூரம் வந்திருந்தேன்..
சாரலும் தூறலும் நின்றிருந்தது.
கடிகார ஊசல்போல் 
பின்னூடும் எண்ணங்கள் 
முன்னூடும் மாற்றங்கள்
முட்கள் முன்னேயே நகர்ந்திடும் 
சில புள்ளிகளில் நாமும்
குழந்தைகளாக வாழ வேண்டும்.
உணர்வுகள் இசைக்கும்.
மழையும் மறுபடி பெய்யும்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**
பாவாடை தாவணியில்
பாண்டி ஆடிக்கொண்டிருந்தவர்கள்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள்
தொலைந்து போயாச்சு !!
பல்லாங்குழியில்
பதித்திருந்த விரல்கள்
அலைபேசிக்குள் ஒட்டிக்கொண்டாச்சு !!
அவிழும் ஆடைகளை மறந்து
கவிழும் பட்டங்களைப்பார்த்த
சின்னச்சின்ன பார்வைகள் பாழாச்சு !!
மதங்களைப் பார்க்காமல்
மனங்களைப் பார்த்த
மகிழ்ச்சி முகங்கள் மறைந்தாச்சு !!
மாலையில்,  வியர்வையில் குளிக்காத
ஒரு ட்யுஷன் யுகம் பொறந்தாச்சு !!
வழுக்கும் சாலைகள் ,
பறக்கும் வாகனங்கள்,
முதியவர் சிலரின் நடைப்பயிற்சியில்
வீதிகளின் பால்யத்தை
என்றோ இழந்தாச்சு !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**
பாதகம் எது வரினும்
பாதிப்பில்லாமல்
பாதுகாக்கும் தந்தை விரல் பிடித்து
பால்யபொழுதுகளில் 
பரவசமான நடை 
பழகிய தெருக்களில்
பூவரச மரத்தின் பூக்கள்
புவியில்  கொட்டும் மாலைவேளைகளில்
பூங்காக்களில் 
பனி படர்ந்த சாலைகளில்..அவர்
பணி புரிந்த இடங்களில்..
தந்தை மறைந்தபின்
தனியே நடக்கையில்..
ஒவ்வோர் அடி 
எடுத்து வைக்கும்போதும்
ஒளிந்து நின்று பார்த்தது..
அவரின் ஆன்மா..!

- கவுதம் கருணாநிதி, திருச்சூர் கேரளா.

**
பால்ய வீதியில் 
தோழர்கள் பல உண்டு 
துணை நிற்க ஆளுண்டு 
விளையாடி விளையாடி 
விளையாட்டும் முடியாது 

கண்ணாமூச்சி கோலியுடன் 
கல்லா மண்ணா விளையாடி 
பச்சைக்குதிரை பம்பரமும் 
பலதடவை விளையாடி 

மண்தெருவே  மைதானம் 
கண் சிமிட்ட நேரமில்லை 
கூட்டாஞ்சோறு உணவதனை 
கூடி நாங்கள் உண்டோமே 

கோட்டிப்புல்லும் கோலியுமே 
காலை உணவு ஆகிடுமே 
மதிய உணவு உண்டிடவே 
மனமும் கொஞ்சம் இடமளிக்கும் 

மகிழ்ச்சியான வாழ்வதனை 
மனம் நினைந்து ஏங்குதிப்போ
பை நிறைய பணமிருந்தும் 
பால்ய வாழ்வை வாங்கிடுமோ 

எப்போதும் எல்லார்க்கும் 
இப்போதும் இனிமைதரும் 
அழகான பால்யமே 
மீண்டும் நீயே வாராயோ !!!

- விஜயேந்திரன் பார்திபன்

**
மழையைக் கண்ட குழந்தையைப் போல்
மகிழ்ச்சியோடு கிழம்பினேன்
வெளியே செல்வதற்கு…
சிறு துளியை கண்ணில் காட்டி
ஏமாற்றிய மேகத்தைப் போல்
பாதியிலேயே ஏமாந்தேன்…
பயணம் செல்லவேண்டாம் என்று
அழைப்பு வந்ததால்!

- த.புனிதா

**
இடப்புறமும் வலப்புறமும் எதையும் விடாது
பால்யத்தின் வீதியில் நான்
பாதசாரியாய்,

மழை விழுவது போல், 
பூ உதிர்வது போல்,
உயிர் பிறப்பது போல்,
மெது மெதுவாய் என் பால்யம்
உருள்கிறது,

இதை தடுக்கலாம், அதை நிறுத்தலாம், 
இதை தவிர்க்கலாம், அதை ரசிக்கலாம்.
நினைவுகளுடன் ஓர் ஓடி விளையாட்டு,

மனதோடிருந்த கனமெடுத்து 
உதட்டோரமாய் உதிர்த்தபடி 
இன்னொருமுறை என திரும்பினேன்
எழுந்து ஓடூ என்கிறது 
எதிர்காலம்!.

மு.துரைபாண்டியன்.  கோவை.

**

பின்னோக்கிய பயணம் 
அறிவுக்கு வித்திட்டதென் பால்யம். 
உச்சி வெயிலில் சாகசங்களாய்
ஆல விழுதுகளில் ஊஞ்சலாடி 
வாலுப் பசங்களோடு  நீச்சலடித்து 
அகமும், புறமும் செழித்து வளர 
உரமிட்டு வளர்த்ததென் 
உறவுகளும், நட்புகளும் .
மாறிப் போன காலங்களில் 
 வளர்ந்து  நிற்கும் இந்நாளில் 
அதிசயமாய் எதிர்படும் 
மாட்டு வண்டியில் ஏறி 
பால்யம் நோக்கி 
பயணிக்கிறது மனம் .   
  
- விஜயலக்ஷ்மி 

**

பால்யவய திலேநாமும் பருவமெய்தும் காலத்தில்
    பலசேட்டை செய்ததுவும் பசுமைமையாய் நீந்திவரும்..!
பால்போன்ற மனத்துள்ளே பதிந்தநல் விஷயங்கள்
    பக்குவமாய் நடைபோடும் பகலிரவாய் நினைவுவரும்..!

கால்கட்டுப் போடாமல் கண்டவிடம் சென்றபோது
    கணக்கில்லா நாட்களையும் கழித்ததுவும் ஓர்காலம்..!
பால்மேனி நோகாமல் பனங்காயில் குச்சியூன்றிப்
    பலமயிலைக் கடந்ததைவும் பற்றுடனே நெஞ்சிலாடும்..!

பருவத்தில் அனுபவித்த பலவிதமாய்ச் சேட்டைகளும்
    பல்லாண்டு ஆனாலும் பசுமைமாறாச் செய்கையாகும்..!
இருவராகச் சேர்ந்துகொண்டு எப்போதும் ஒன்றாக
    இணையாகக் கைகோர்த்து இப்பள்ளி சென்றோமே..!

ஒருகரையின் ஆற்றின்மேல் ஓடியாடிக் குதித்தநாளும்
    ஒன்றாக மகிழ்ந்தநல்ல உணர்வுகளும் இனிவருமா..!
உருவத்தால் ஒன்றாகா உணர்விற்கே முதலிடமாம்
    உண்மையன்பு கொண்டூட்டும் ஓருறவே பால்யமாகும்..!

அன்பாகப் பிடித்துவந்த அழகானப் பொன்வண்டை
    அடைத்துவிட்ட ஆனந்தம் அன்றாடம் நிழலாடும்..!
தின்னாத நுணாக்காயில் திறமையுடன் தேர்செய்து
    தினமுமதைத் தந்திரமாய்த் தெருவீதி இழுத்ததுவும்..!

பின்னாலே நின்றுகொண்டுப் பிறரியாத வண்ணமாக
    பெண்களிரு சடைமுடியைப் பின்னிவிட்ட வேடிக்கை..!
இன்னமுமே மறக்கவில்லை இன்பச்செய் கையதுவாம்
    இன்றுமந்த நினைவலைகள் என்றைக்கும் அழியாது..!

- பெருவை பார்த்தசாரதி

**

உன்னோடு கை கோர்த்த முதலே ,
அன்பிற்கு அளவில்லே
ஆனந்த தாண்டவத்திற்கு தடையில்லே
ஈகைக்கு வருத்தமில்லே
உயர உரிமைக்கு உன்னிடத்திலே
ஊட்டிவிட உடன் யாரும் தேவையில்லே
என் அறிவிற்கு முகவரி உன் அறிவுக்குள்ளே
ஏணியெனக்கு நீந்தப்புள்ள
சிரிப்புக்கு சிறையில்லே
சொத்துக்கு சோகமில்லே…,
உறவுகளை தாண்டி உயிருக்குள் உட்புகுந்த
உணர்வுக்கு உரிமை உன் விலாசமென
என் விழிகண்டு வழி பார்த்து எதிர்பார்த்ததே
பால்ய வீதியிலே பழகிய நாட்களை பழங்களாய் 
நடைபோட்டுக்கொண்டே ருசித்து போகலாமென 
நினைக்கும் போதே கொண்டாடுது நட்பே…..

- இராஜேந்திரன் சத்யா

**
பூவரசமரத்தில் ஆடிய ஊஞ்சலும்
பனங்கொட்டை வண்டியும்
பச்சைக் குதிரையும்
அச்சாங் கல்லும்,
ஆடு புலி ஆட்டமுடன்
தேடி விளையாடும் - கண்ணா மூச்சியும்
ஆச்சி வீட்டின் அடுக்கடுக்கு
பணியாரமும்
பேச்சி கோவிலும் - கருப்பண்ணசாமி குதிரையும்
தெருக் கூத்தும்
'அதாகப் பட்டது - என
ஆரம்பிக்கும் நாடகங்களும்,
பதினாறு எம்.எம் திரைப்படங்களை வீதியில் பார்த்ததும்

வரலாற்றுப் புத்தக ஏடுகளில் ஏற
எமது பிள்ளைகள் - ஆன்ட்ராய்டு அடிமைகளாய்
மின் விளையாட்டுக்களில்
மூழ்கித் தொலைப்பது
பால்யம் மட்டுமா? தங்கள்
மூளைகளையும் தான்
வாட்ஸா ப்பில் வாழ்ந்து முகநூலில் சிரித்து
அருகில் இருப்பவரோடு அளவளாவவும் விருப்பின்றி .

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
மஞ்சள் நீர் எடுத்து
மாரியம்மன் கோவிலுக்குச்சென்று
நெஞ்சில் பரவசத்துடன்
நேரத்தே நிகழ்ச்சிகளுக்கும் போய்
விடிய விடிய கான மேளா
கண்டதுண்டு..!
முடியும் முன் பனி கொண்டு
முன்பே வந்தாலும்
செவிகள் கேட்டுக்கொண்டேயிருக்கும்
கவிகள் பாடிக்கொண்டே இருப்பர்..!
மங்களமாய் மங்கையரும்
பொங்கல் வைப்பர்..!
மாவிளக்கெடுப்பர்..!
மனதையும் கொள்ளையடிப்பர்..!
பால்ய வீதிகளில்
பாலர் பள்ளியும்
மாரியம்மன் திருவிழாவும்
மனதிற்கு இதமாம்..!
மறுபடி ஒருமுறை ஊருக்குச் சென்றிருந்தேன்..
மற்றெல்லாம் மாறவில்லை..ஆயினும்
மனதில் மகிழ்வும் ஏறவில்லை!
மீண்டும் ஒரு முறை பிறந்துவிடவா?
மகிழ்வில் என்றும் சிறந்து விடவா?

- நர்மதா கவுதம், திருச்சூர், கேரளா

**
பால்மணம் மாறாத
வண்ணத்துப்பூச்சிகள் 
பாலின பேதமின்றி
கூடிக்களிக்கும் 
பால்ய வீதியில்!

மூட்டை தூக்கியே 
முதுகு கேள்விக்குறியான
ஆச்சரியக்குறிகள் 
மழலைகள்!

அறிவொளி பெற்று 
ஒளிவீச வேண்டிய 
குழந்தை நட்சத்திரங்களின் 
கண்ணொளி பறிக்குது 
கைப்பேசியும் தொலைகாட்சியும்!

மலர்கள் மலர்ந்தால் 
செடிக்குப் பெருமை!
மழலைகள் மலர்ந்தால் 
குடிக்குப் பெருமை!

தம்பிகள் தும்பிகளோடு 
துள்ளி குதித்து விளையாடும் 
பால்ய வீதியில்
பந்து ஆடலாம்! 
சிந்து பாடலாம்!

மனிதத் தோட்டத்தில் 
சிரித்துக்கொண்டே இருக்க
வரம் பெற்ற குழந்தைகள் வாழ்வில் 
சதி விளையாடியது அன்று
விதி விளையாடுகிறது இன்று!

பால்ய வீதியில் 
கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடும் சிறுமிகளை
கூட்டு பலாத்காரம் செய்யும் காமுகர்கள் 
இல்லாத சமுதாயம் மலரட்டும்!

குழந்தை காப்பகங்களே
வன்கொடுமை நிகழ்த்துவது
வேலியே பயிரை மேயும் 
விபரீதம்!

பால்ய வீதியில் 
பால்ய விவாகம் இல்லாமலும்
பாலியல் வன்கொடுமை நடக்காமலும்
குழந்தைகள் கொள்ளை போகாமலும்
காப்போம்! 

-கு.முருகேசன்

**

இளங்கன்றுகளாய் பய மறியாது
கள்ளமென்பதை உள்ளமறியாது
களத்தில் தினம் கூடி
திளைத்திருந்தோம் நண்பர்களாய்

குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும்
கொடுத்த சுகத்தில் குதூகளித்து
தெருவெல்லாம் சுற்றி வந்து
சிறகடித்தோம் பட்டாம் பூச்சியாய்

பனை ஓலை காத்தாடியை
பறக்க விட்டு திரிந்தோடி
பனங்கொட்டை வண்டி கட்டி
பல வீதியையும் கலக்கினோமே

மழை வந்தால் கொண்டாட்டம்
மண்ணீசலுக்குத்தான் திண்டாட்டம்
வட்டி நிறை கஞ்சி அமிர்தத்தை
வட்டமிட்டு அமர்ந்துண்டதை மறப்போமா

பால்ய வீதி நினைவெல்லாம்
பசு மரத்து ஆணியென நெஞ்சிலிருக்க
காலம் நம்மை கடத்தினாலும்
நெஞ்சினித்த அந்த சுகம் திரும்ப வருமா !

- மதுரை மாலதி (P.C.)

**
பள்ளிக்கூட மணியடிக்கும் மாலை 
பல்லிளிக்க ஓடி வருவோம்! 
கூட்டாஞ்சோறு ஆக்கி
கூடி மகிழ்ந்த பருவம்! 
ஒன்றாய் சேர்ந்தே சுற்றி 
ஓடிப் பிடித்தே விளையாடி 
கண்ணாமூச்சி ஆட்டமாடி மறைவோமே! 
ஒருவரை ஒருவர் ஓங்கி அடிப்போம்! 
உடனே விரைவாய் அதனை மறப்போம்! 
சேர்ந்தே செய்யும் தவறை 
உயர்வாய் கூடி ஏற்போம்! 
பக்கத்து வீட்டு மாமரத்தில் மாங்காய் 
பறித்து புளிப்பு மாற 
உப்பு சேர்த்தே தின்போம்! 
தேங்காய் உடைத்துத் தின்றதால் 
அப்பாவிடம் அடிவாங்கினோம்! 
பனங்காய் பறித்துத் 
தின்றே பசியாறினோம்!  
நீச்சல் தெரியாமல் ஏரியில் 
குளிக்க வந்து என்னை 
முக்கிய எடுத்தாயே!  
ஆட்டின் மடியில் கை வைத்து 
பால்பீய்ச்சிக் குடித்தோமே! 
மாட்டின் முதுகிலேறி 
சவாரி செய்தோமே! 
களாக்காய்,வெளாம்பழம், 
குறிஞ்சிப்பழம், ஈச்சம்பழம் பறிப்போமே!  
மாவிளக்குமாவில் தேங்காய் 
சேர்த்தே தின்றோமே! 
மேட்னி ஷோ சினிமாவுக்கு 
நடந்தே சென்று பார்த்தோமே! 
வட்டமாய் முறுக்கு வாங்கி 
தேன் மிட்டாய் சேர்த்து சுவைத்தோமே! 
சப்பாத்திப்பழம் பறித்துத் தின்று 
சிவந்த உதடுகளால் சிரித்தோமே! 
சுதந்திர தினவிழாவில் தந்த 
ஆரஞ்சுமிட்டாய் சுவை மாறாதே! 
பால்யவீதியில் பசுமை நினைவுகள்! 
மலர்ந்த மல்லிகை மணமாய் வீசுகிறதே! 

- ஆகாசம்பட்டு A.k.சேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com