கடந்த வாரத் தலைப்பு ‘சொற்கள்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

பூகோள விரிப்பில் மொழிகளுக்கான சொற்கள்
கடந்த வாரத் தலைப்பு ‘சொற்கள்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

சொற்கள் வார்த்தைகளா? எழுத்துகளின் சேர்க்கையா? 
சிந்தனைகளின் உடலசைவின் மொழியா? 
எண்ணங்களின் வார்ப்படமா? ஒலிகளா,ஓசைகளா? 
பாவனைகளா,பார்வைகளா? பேசுதலா,கேள்விகளா? விடைகளா? 
சீரா,அசையா, தளையா, எதுகையா, மோனையா? பொருள் தருவதா? 
மொழியின் அடிப்படைக் கூறுகளா? 
ஓரெழுத்தொரு,ஈரெழுத்தொரு பகுபதமா? பகாபதமா? 
தனியெழுத்து,தொடரெழுத்துள்ள பொதுமொழியா? 
தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை 
சொல்லும் நால்வகையா? 
பெயர்,வினை,இடை,உரியும் பொருள்படுமே! 
சொற்கள் முற்று, எச்சம்,தெரிநிலை, 
குறிப்பும் வினைப்பகுபதமே! 
பகுதி,விகுதி,இடைநிலை,சந்தி,சாரியை உறுப்புகளே! 
சொற்கள் புதையலா? 
எழுத்தின் அகரவரிசையில் சொல்லகராதியா? 
சொற்களஞ்சியமா? இலக்கணத்தின் எழுத்து, 
சொல், பொருள், யாப்பு, அணி வகையின் இலக்கியமே! 
அழகு சொற்கள், அன்பு சொற்கள்,வர்ணணை சொற்கள், 
வெற்று சொற்கள்,வாய் சொற்கள், நம்பிக்கை சொற்கள், 
மழலை சொற்கள், மந்திர சொற்கள், கற்பனை சொற்கள், 
காவிய சொற்கள், இளமை சொற்கள், ஆசை சொற்கள், 
காதல் சொற்கள், மங்கலச் சொற்கள்  என்றே பெருகிடுமே! 
கருத்தும், பொருளும் நிறைந்து, சொற்கள் மனிதன் 
மண்ணில் வாழும் வரை,மொழியும் சொற்களும்
நித்தியமாய் காலத்தால் அழியாமல் வாழ்கவே! 

- ஆகாசம்பட்டு A.k.சேகர் 

**
உந்தன் சொற்கள் ஆயிரம் கோடி
ரத்தம் அற்ற என்னைக் கொல்ல
எங்கே சென்றாய் ஆயுதம் தேடி?

சொற்கள் உனக்கு எப்போதும் கற்கள்
சூனிய விலங்கின் சூட்சுமப் பற்கள்
சொர்க்க வாசனைச் சொற்கள் எல்லாம்
தர்க்கப் பேச்சில் தறிகெட்டுப் போயின

நாவில் எப்போதும் நரக நெருப்பு
சாவில் தெரியும் சாத்தான் சிரிப்பு
பூவின் உள்ளே புத்தமு தெல்லாம்
தீவில் எரியும்  தீயின் சொல்லாம்

பெருமலை போன்ற பெருமை இங்கே
எரிமலைச் சொல்லில் எரிகல் ஆனது
அருங்கலை வார்த்தை அழகுகள் எல்லாம்
அழுங்கலைச் சுமக்க அன்பும் போனது


வேண்டும் வேண்டும் விண்ணும் மண்ணும்
தாண்டும் பெரிய தனியொரு வார்த்தை
தூண்டும் விளக்காய் தூமலர் விழியாய்
தீண்டும் தென்றலாய் தித்திக்கும் வாழ்க்கை 

- கவிஞர் மஹாரதி

**

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்
உண்மைதான் கவனமாகப் பேசுவோம் !

நல்லது பேசிட நல்லதே நடக்கும்
நாளும் இன்சொல்லே பேசிடுவோம் !

யாருக்கும் சாபம் இட  வேண்டாம்   
யார் மனதையும் புண் படுத்த வேண்டாம் !

தீக்காயம் ஆறி விடும் சில நாளில் 
சொல்காயம் ஆறாது சொன்னவர் வள்ளுவர் !

கனி போன்ற இனிமை  சொற்கள் இருக்க 
காய் போன்ற வன்சொல் எதற்கு என்றார் !

இனிமையாகப் பேசினால் உங்களை உடன் 
எல்லோருக்கும் பிடிக்கும் உணர்ந்திடுங்கள் !

உங்களிடம் மற்றவர் எப்படி பேச வேண்டுமென 
உங்கள் மனம் விரும்புகிறதோ அப்படியே பேசுங்கள் !

சொர்களால் யாரையும் காயப் படுத்த வேண்டாம் 
சோகத்தில் ஆழ்த்தி சுகம் காண வேண்டாம் !

.அன்பாகப் பேசுங்கள் அனைவருக்கும் பிடிக்கும் 
ஆணவப் பேச்சு ஒருபோதும் வேண்டாம் !  

மலர் போன்ற இன் சொற்கள் இருக்கையில்  
முள் போன்ற வன் சொற்கள் எதற்கு ?

- கவிஞர் இரா .இரவி

**
கல்லால் அடி பட்டாலும்
கனி மரங்கள் 
இனிய கனிகள்  
கொடுக்க மறுப்பதில்லை!

உலகில் 
கற்கள் போன்று 
சொற்களால் உன்னை அடித்தாலும்
கனிவான சொற்களை 
இனிமையாகப் பேசுங்கள் !


துன்பம் என்னும் அலை வந்து 
படகை அலைக்கலைத்தாலும்
துடுப்பு என்னும் 
இனிய சொற்களால் – உன் 
வாழ்க்கைப் படகை செலுத்து 
அமைதியாகக் கரை வந்து சேரும் ! 

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 

**

அறுசீர் விருத்தம்
(மா மா காய்)

வெல்லுஞ் சொற்கள் சொல்லிடுவோம்
வேண்டும் நன்மை பெற்றிடுவோம்!
நல்லன வெல்லாஞ் சொல்லிடுவோம்
நலங்கள் யாவும் பெற்றிடுவோம்!
பொல்லாங் கதனை விரட்டிடுவோம்
போற்றி யாவும் வென்றிடுவோம்!
சொல்லுஞ் சொற்கள் யாவையுமே
சொந்தம் பெருகச் செய்திடுவோம்! 

– கவிஞர் வ.க.கன்னியப்பன்

**

நற்சொற்கள் மனதை வருடும்
தீஞ்சொற்கள் விலக்கி வைக்கும் 
நற்பண்புகளை வளர்ப்போம் 
நல்ல வார்த்தைகள் பகிர்வோம் 
பாதிக்காத சொற்கள் பேசுவோம் 
சொற்களால் சுகந்தமே தருவோம் 
புண்படுத்தாததை கூறுவோம் 
புரிய வைக்க சொல்லே சுகம் 
இதமாக மனதை தழுவட்டும் 
இனிக்கும் சொல்லே அமுதம் 
இதயத்தை அது குளிர்விக்கும் 
இனிமையினை உணரட்டும் 

- பாலா கார்த்திகேயன் 

**

நிறைமாத சொற்களை
நாவின்
கருபையில் பிரசவிப்பது
ஆனந்த யாழ் மீட்டி
பிரவாகப் படுத்தவல்ல
முகம் தெரியாதவரையயும் உயிர்ப்புபிக்கும் அனுபவம்

மழலையின் குழறலில்
சொட்டும் தேன்ஒழுகலில்
வியக்க
மனம் மகிழச்செய்யும அற்புதம்
அது மொழிகளின் திறப்பு வாசல்

பிரமாண்ட வெளியில்
வியாபித்த வெறுமையில்
உருவமற்று மின்னின
நட்த்திரங்ளாய்
பூகோள விரிப்பில் மொழிகளுக்கான
சொற்கள்

மாமிச குருதிக்கு முன்னால்
வார்த்தைகள் இருந்ததில்
திசைகள் பிரிந்தன

சிதறுண்டுப் போனதும்
தான் உச்சரித்த வார்த்தைகளை
சொற்களை முன்நிறுத்த 
போராடாமல் இருந்தில்லை 
எவரும்

தானே கரைக்கட்டுக்கொண்டு
தாகம் தணிக்கும் பெருநதிகள் 
கருத்துகள் ஊறிப்பாயும்
சொற்கள்
அது எங்கும் பாயத்தான் செய்யும்

சொற்கள் இன்றி
எப்பயணமும் நடவாது 
எவர்களாலும்

ஒற்றைச் சொற்கள்
ஒற்றை ஆட்சியின் கீழ்
எல்லோரையும் ஒடுக்க
அர்ப்பறிக்கிறது

என்றாலும் 
மொழியை வணங்குவோம்
முதலில் உச்சரித்த 
அவரவர் மொழியைப் போல்
நம் ஆதி மொழியாம்
தமிழையையும் வணங்கி காப்பாற்வோம்.

- கா.அமீர்ஜான்

**

ஒரு அபஸ்வரமான பாடலுக்கு
ஒரு மோசமான கவிதைக்கு
ஒரு எதிர்மறையான கதைக்கு
வெறும் சொற்களால் கட்டமைக்கப்பட்டவைக்கு
எதிர்வினையாக என்ன செய்ய முடியும்?
ஒரு நல்ல கதை ஒரு அழகிய கவிதை
இவற்றை எழுதுவதே பதில்!
பயனற்ற சொற்களால் இனி
ஒருபோதும் எழுதத் துணியாதீர்கள்
இனி சொற்களை இறைக்காதீர்கள்!

- சினேகா

***

சொற்கள் 
அமிழ்தினும் இனியது 
இலக்கணமும் 
தலைக்கணமும் அற்ற 
மழலையின் சொற்கள்!

மதிமயங்கியவனையும் 
தெளிய வைத்து
உற்சாகமூட்டுவது
நண்பனின் சொற்கள்!
தெளிந்தவனையும் 
தேன் குடித்த வண்டென 
மதிமயங்க வைப்பது 
காதலியின் சொற்கள்!

நாட்டை வளப்படுத்த உதவது 
மந்திரியின் சொற்கள்!
வீட்டை வளப்படுத்த உதவது
மனைவியின் சொற்கள்!
தொண்டர்களை பலப்படுத்த உதவது 
தலைவனின் சொற்கள்!

சுரம் பிடித்து நடக்கும் சொற்களால் 
பாடல் பிறக்கும்!
கரம் பிடித்து நடக்கும் சொற்களால் 
கவிதை பிறக்கும்!

துவண்டு விழுபவனை 
தூக்கி நிறுத்துவது 
ஊக்குவிப்பவனின் 
உற்சாகச் சொற்கள் !
போதையில் மூழ்கியவனையும் 
பாதை மாற்றுவது 
மனைவியின் 
மந்திர சொற்கள்!

சொற்கள் 
அருவியாய் விழுகிறது 
கவிஞனிடத்தில்!
சொற்கள் 
அறிவுரையாய் விழுகிறது 
தந்தையிடத்தில்!

நம்மை நலம் பெறச் செய்வது 
நண்பனின் சொல் எனில்
நம்மை ஏற்றம் பெறச் செய்வது 
எதிரியின் சொல்லன்றோ!

அடுத்தவரை சுட்டெரிக்கும் சொற்களைத்
தூக்கிப் போடுவோம்!
அடுத்தவரை தட்டி எழுப்பும் சொற்களை 
காதில் போடுவோம்!

வாய் பேசும் 
வார்த்தைகளைவிட
காதலியின் 
கண்பேசும் வார்த்தைகளுக்கு 
வலிமை அதிகம்!

பல் போனதால் 
சொல் போகலாம் 
சொல் போனதால் 
பால் போகலாமா?

பூக்களை 
நூலில் கட்டினால் 
பூ மாலை!
சொற்களை 
நூலில் கட்டினால் 
கவி மாலை!

மனிதன் பேசும் சொற்கள் 
தோன்றுவது என்னவோ  
சப்தத்தில்!
மனிதன் படைக்கும் சொற்கள் 
குவிந்திருக்கும் புத்தகமும்!
புத்தகம் குவிந்திருக்கும் நூலகமும்!
எப்பொழுதும் இருப்பது 
மௌனத்தில்! 
 - கு.முருகேசன்

**

சொல்லையும் கல்லாயாக்கித் தூக்கி நாம் வீசலாகும்
கள்ளையும் சொல்லாயாக்கின் காதிலே இனிமை சேர்க்கும்
சொல்லது தீயதானால் சொற்களோ சொற்கல்லாகும்
சொல்வது இனிதாயானால் சொற்களோ சொற்கள்ளாகும்
வெல்ல நாம் வேண்டின், எம்மை விரும்பிடப் பலரை மாற்றும்
வல்லமை வேண்டின் சொற்கள் வாய்வழி தேனாய் மாறி
நல்லதாய் வரும்போதேதான் நடைபெறும் அந்த மாற்றம்.
அல்லதாய் தீமை சேர்க்கும் அருவருப்பான சொற்கல்
கொல்வதால் எம் பண்பாட்டைக் கொடிய சொல் தவிர்த்து என்றும்
மெல்லிதாயிதமாய்ச் சொல்லை வீசலே வெற்றி சேர்க்கும்.

(கள்-தேன்)

வாழ்க்கையில் வெற்றிகாண வார்த்தைகள் உள்ளபோது்--
மனத்திலே கல்லும் கெட்ட வாயிலே பொல்லாச் சொல்லும்
அனைத்திலும் பொய்மை சேர்ந்த அருவருப்பான பண்பும்
தினைத் துளியளவும் நன்மை செய்திடா இயல்பும் கொண்டு
பனைத்துணை உதவி கேட்டாற் பரமன் வந்தருள் செய்வானா
ஆதலால் உலகத் தோற்றத்(து) ஆதியில் இருந்த வார்த்தை
ஆமெனும் வார்த்தை அஃதே ஆண்டவன் வடிவாமந்த
ஓமெனும் உயர்ந்த சொல்லே உயிரெலாம் கலந்த சத்ய
நாமமாய்ப் பிரபஞ்சத்துள் நடஞ்செயும் அதிர்வென்பார்கள்.
நாமெலாம் அமைதி காண நமக்கது வழிகாட்டட்டும்.

ஆதியிலே வார்த்தை இருந்தது,….அந்த வார்த்தை
தேவனாயிருந்தது. யோவான் -1-1

- எஸ். கருணானந்தராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com