கடந்த வாரத் தலைப்பு ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

எல்லாம் நல்லா நடக்குமுன்னே! எங்கும் இல்லா நாடகமிங்கே! 
கடந்த வாரத் தலைப்பு ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!

விசமிகளின் சகதியில் 
விளைந்த பூங்கொடியை 
விலைகொடுத்து வாங்கவேண்டிய 
தரகன் ஒருவன் 
கொடி வாங்கிப் போக 
பெரும் பேரம் பேசியே 
காசு கேட்கிறான்...! 

கொடி கொடுத்து
கொடை கொடுக்க பணமில்லாத 
அந்தப் பரிதாபத்துக்குரிய 
பாசக்காரத் தோட்டக்காரன்...

பறந்து சென்று பணம் 
தேடமுடியாமல் உடைந்து போன 
தன் சிறகுகளால் உண்டான 
ஊனம் உடலோடு இருந்தாலும்... 

கடல் தாண்டி காசு பணம் 
பார்க்க வந்த வாய்ப்புகளும் 
காற்றின் வேகத்தில் 
கரை ஒதுங்கிய ஓடம் போல
ஆகிவிட...

பூங்கொடியின் 
வசந்தகாலக் கோலங்கள் 
பாதியில் முறிந்த பயணமாக 
கலைந்து போனது எல்லாம் 
என்ன...? 

காலத்தின் சாபமா...? 
அல்லது கொடி வளர்ந்த 
தோட்டத்தின் குற்றமா...?

- கவிஞர் பி.மதியழகன்

**
பயணப்பட எத்தனிக்கும் முன்னே
சயனத்தில் வீழ்ந்தது என் பயணம்
கவனமுடன் திறமையும் துணைகிருந்தும்
பயணம் பாதியில் முறிந்த தேனோ ?

கருவில் சூல்கொண்ட நாள்முதலே
வறுமை பின்னிழுத்த போதும்
கருத்தில் தொய்வில்லாமலே
பொறுப்பாய் படித்திருந்தும்

துரத்திய வறுமையை தூரத்தே
நிறுத்தி வைத்து நேர்மையை கரம்பிடித்து
உறுதியாய் நின்ற போதும்
சறுக்கிய நிலை காண சகிக்கவில்லை மனம்

முப்பிறவி பாவமென்றார் 
எப்பிறவியிலும் உழைப்பிற்கு தோல்வி இல்லை
நேரம் பாரா நேர்மையான உழைப்பினால்
பாதியில் முறிந்த பயணம் தொடர்ந்திட செய்வோம்.

- வ. இசக்கி ராஜு

**

பயணம்  -  அது
நாம் விரும்பும் இடத்தை 
அடைய உதவும் படிகள்!
அது - பாதியில் 
முறிந்தால்  உடலும்  உள்ளமும் 
முறிந்து  போகும்!
பள்ளி பயணம்  அது 
தள்ளி முறிந்தால் 
தடைபடும்  படிப்பு என்ற படி!
திருமண  பயணம்  அது 
வெறுமையில்  முறிந்தால் 
கருமையான  வாழ்க்கையாகிவிடுமே!
எந்த  பயணமும்
சொந்தமின்றி பாதியில்  முறிந்தால் 
பந்தமில்லா தனி மனிதன் 
போல  உள்ளமும்  வாடுமே!
முறிந்த  பயணத்தின்  காரணத்தை 
செறிவுடன் சிந்தித்தால் 
நெறியான  பயணமாகி  இனிக்கும்!

- உஷா முத்துராமன், மதுரை   

**

தொடுத்த அம்புகள் இலக்கில் செல்லவேண்டும்
எடுத்த செயல்கள் வெற்றி வசமாக வேண்டும்
அடுத்த முயற்சி என தொடரோட்டமாக வேண்டும்
மிடுக்கான பயணங்கள் ஆனந்தமாக வேண்டுமே

பாதி கிணறு தாண்டும் இலக்கு மரணமல்லவா
ஓதி உணர்ந்தே செயல் தொடங்க வேண்டுமல்லவா
மோதி வலியானாலும் வெற்றி வேண்டுமல்லவா
நாதியற்றிருந்தாலும் நம்பிக்கை வேண்டுமல்லவா

படிப்பில் உயர்கல்விக்கு முயன்று கற்கும் போது
பிடிப்பில்லாத பொருளாதாரம் பல்லிளிக்கும் நேரம்
விடியலுக்கான வழிகளேதும் எங்குமில்லையே
துடிப்பில்லாமல் பாதியில் முறிந்த பயணமானது அது

காதலில் விழுந்து கனிந்து மணம் முடிக்க நினைத்தால்
மோதலாக சாதி மதம் வந்து சதிராடித் தீர்த்த நிலையில்
காத தூரம் காதலர்களைப் பிரித்திடும் தீய சக்திகளினால்
காதலன்புப் பயணம் பாதியில் முறிந்த பயணமானதே

இறைவன் கொடுத்த வரம் தவறியதால் வாழ்வுப் பாதை
உறைந்து கரடுமுரடாகி கல்லும் முள்ளும் காலில்குத்த
நிறைந்த இடையூறுகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி
மறைந்து வாழ்வுப் பயணம் பாதியில் முறிந்து நின்றதே

பாதியில் முறிந்த பயணங்களால் பயனேதுமில்லை
ஆதியில் தொடங்கிய பயணம்  அந்தம்வரை தொடர
நீதி நின்று துணையிருந்தால் முயற்சி தொடர்ந்தால்
பாதியில் பயணங்கள் முறியாது வெற்றியாகலாமே.

- கவிஞர் ராம்க்ருஷ்

**

வாழ்க்கை சக்கர
அச்சாணிக்கு பணம்
எண்ணெய் ஊற்றி
உருட்டிய  தமிழ் வண்டியின்
பாதைகளில் இரு மருங்கிலும்
கள்ளிப் புதர்கள்!
இருண்ட வனத்தில்
தமிழ் வண்டி
கல்விக்கண் விளக்கு தேடி
அலுத்து பாதியில்
முறிந்த பயணத்தை
எண்ணியபடி 
இணையத் தமிழ்
நிழலில் உடைந்த
நிலாச் சிதறல் 
முற்றத்தில் காத்திருக்கிறது!

-சீனி

**

கண்ணே மணியே எனக் காதலித்து
கட்டிக்கரும்பே அமுதே எனக் குழைந்து
நீயின்றி நான் இல்லை எனக் குழறி – பொழுதை
நித்தம் தொலைபேசியில் தொலைந்ததே

ஆசையால் கைப்பிடித்து ஆனந்தமாய்
இச்சையுடன் தனிக்குடித்தனம் போய்
கூடிக்குலவி  கணவன் மனைவியாய் – காலத்தை
தேடிக் கைபேசியில் கரைத்ததே

இன்பக்கடலில் இல்லறம் செல்லாதே
துன்பக்கடலில் இல்லறம் சென்றதே!
அலைபேசியில் அலைந்து ஐயப்பேய் – உள்ளத்தை
அலைக்கழிக்கப் பாதியில் முறிந்தது பயணம்.

- மீனாள் தேவராஜன்

**

அருமையாக  வாய்த்திட்ட  வாழ்க்கை  தன்னை
    அன்பான  மனைவியொடும்  குழந்தை  யோடும்
பெருமைதரும்  வழியினிலே  வாழ்ந்தி  டாமல்
    பேரழிவைத்  தரும்மதுவிற்  கடிமை  யாகி
வருவாயை   அதிலிழந்து  குடும்பம்  தன்னை
    வறுமையிலே  துடிதுடிக்க  வாட  விட்டும்
உருவான  நோயினிலே   சிலரோ  இங்கே
    உயிர்ப்பயணம்  பாதியிலே  முறிக்கின்  றார்கள் !

வெண்சுருட்டால்  வரும்நோய்தான்  என்ற  றிந்தும்
    வெளித்தெருவில்  வீட்டிற்குள்  புகையி  ழுத்துக்
கண்சுற்றி  கருவளையம்  காச  நோயும்
    கணையம்தான்  பாதிக்க  உடலும்  வீங்க
மண்மீதில்   வாழ்வதற்காய்க்  கிடைத்த  வாழ்வில்
    மரணத்தைப்  பாதியிலே  அழைத்து  வந்து
கண்முன்னே  கிளைமுறிந்து  விழுதல்  போல
    கண்மூடி  சிலரிங்கே  விழுகின்  றார்கள் !

அற்புதமாய்  வாய்த்திட்ட   இயற்கை  தன்னை
    அழிக்காமல்  மாசாக்கிக்  கெடுத்தி  டாமல்
குற்றங்கள்  வன்முறையில்   கொள்ளை  யிட்டுக்
    குவிக்காமல்  நேர்வழியில்  பொருளை  யீட்டி
நற்பண்பில்   வாழ்க்கையினை  அமைத்துக்  கொண்டால்
    நடுவழியில்  பயணம்தான்  முறிந்தி  டாமல்
உற்றதொரு  புகழோடு   ஞாலம்  போற்ற
    உயர்வாக  வாழ்ந்திடலாம்  இறந்த  பின்பும் !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**

கண்டதும் காதல் கொண்ட 
கோதையர் பலரும் 
கண்ணிலே காதல் பேசும் 
காளையர் பலரும் 

கணப்பொழுதில் காதல் கொண்டு 
கடுமையாய் காதல் உண்டு 
பெற்றோரை எதிர்த்து நின்று 
பெருமையாய் மணமும் கொண்டு 

மூன்று மாதம் முடிக்கையில
மூவேளை உணவிருக்கோ 
முடங்கிடவே இடமிருக்கோ 
ஆனாலும் பஞ்சமில்ல 
அடிதடிக்கு மட்டுமங்கு 

காதல் செய்கையிலே
கண்ணேன்னு சொன்னவங்க 
கல்யாணம் முடிஞ்சதுமே 
கழுதைன்னு சொல்வதென்ன 

உண்மையான காதலுன்னா 
உடலை மட்டும் பாக்காது 
உயிரோடு மனம் பார்க்கும் 
உறவுக்கே உயிர் கொடுக்கும் 

உடல் பார்க்கும் காதலெல்லாம் 
உண்மையான காதலல்ல 
பாதியில முறிந்து விடும் 
பாழாக்கி வைத்து விடும் 

- பார். விஜயேந்திரன்

**

உலக வாழ்க்கையே 
ஒரு பயணம் தான் !
உனக்கான வாழ்க்கைப்
பயணம் 
பாதியில் முறிந்தது என்று
பயணத்தை முடித்துக் கொள்ளாதே  !
எதிர்பாராமல்  நிகழும்
ஏதாவுதொரு தடங்கலால்
திசை மாறும் பயணம் உண்டு !
திருப்பங்கள் தரும் தருணமும் உண்டு !
பார்வையும் பாதையும் மாறினாலும்
பயணங்கள் என்றும் முடிவதில்லை.!
பாரினில் பயணிக்க பாதை
பல உண்டு என்பதால்
புதியதோர் பாதை தேர்ந்தெடு !
புதியதோர் பயணம்தொடங்கு!இலக்கு     
கொண்டு பயணிக்கையில்
இடையே இடர் பல வருவதுண்டு !
இடறி  விழாமல் பயணிக்க
இதயமதில் நம்பிக்கை கொள் 
மனிதா ! முன்னேறும்  எண்ணமதில்
திண்ணமாயிருந்தால்
முடிவில் கிடைப்பது வெற்றியே !

- ஜெயா வெங்கட்

**

அகத்தேடலின் ஒரு பயணம்.
தேடுதல் துறக்கவும் தேடிய‌ பயணம்.
பயணப்பட்டோம்.. 
பெரும் குன்றுகள்.. 
நடுங்கவைக்கும் பள்ளங்கள்..
சிரிக்கும் சிற்றோடைகள்..
சிறுவெளிச்சம்.. பெருமௌனம்..
கைப்பிடிக்கும் வழித்தடங்கள்..
உள்ளம் விரிக்கும் பரந்தவெளிகள்
சித்தன் மொழிகள் சிதறிக்கிடக்கும் காடு.
குன்றிலிருந்த சித்தனைத்தேடி வந்து
பாதியில் நின்றது பயணம்...
பெரும் மழை..
திசை மாறியது பயணம்..
கந்தலோடு கந்தலாய் நனைந்திருந்த‌
வழிப்போக்கன் வழித்துணை ஆனான்
கருப்பன் என்று பேர் சொன்னான்.
சித்தனையா தேடி வந்தீங்க ?
சித்தன் சிரிச்சதால பேய்மழையாப் பேயுது.
கருப்பட்டியும் கருஞ்சுருட்டும்
சித்தனுக்கு ஆகாத பொருளொன்னும்
எனக்கு வேண்டாத பொருளொன்னும்
எங்கிட்ட குடுத்துப் போங்க‌..
பேராசை பெருங்கோபம் 
பெருந்தீனி பெருங்காமம்
பொய்பொரட்டு பொறணியெல்லாம் 
சித்தனுக்கு ஆகாது
இந்தக் கருப்பனுக்கும் ஆகாது
எங்கிட்ட குடுத்துப் போனா
சித்தன்கிட்ட தந்துவிட்டு சொல்லிவெப்பேன்
சித்தனே வரச்சொல்லி உங்ககிட்ட சொல்லிவெப்பான்..
சித்தன் சிரிச்சதால பேய்மழையாப் பேயுது..
வந்த வழி சேர்த்துவிட்டு கருப்பன்
போன வழியே பாடிப்போனான்.
பயணம் பாதியிலே நின்றாலும்
வாழ்க்கையில் 
பயணங்கள் என்றுமே முடிவதில்லை.
பிறகு
கருப்பட்டியும் கருஞ்சுருட்டும் சுமந்துபோன‌
பயணங்கள் அவ்வளவு..ஆனால்..
கருப்பனைக் காணவில்லை..
கருப்பனே சித்தனனால் 
கண்ணுக்குத்தான் தெரிவானோ ?

- ரமேஷ் கோபாலகிருஷ்ணண்

**

செல்லும்வழி எல்லாம் சொல்லும் காதல்மொழி
வெல்லும் இந்த உலகையெல்லாம் போதைவிழி
கள்ளவிழும் பூக்கள் சொல்லும் காமன்மொழி 
முள்சுமந்த காட்டில் என்ன மோகவழி?

ஆதியிலே வந்த திந்த ஆசை நெஞ்சம்
அன்புவழிப் பயணத்தில் எல்லாம் வஞ்சம்
பாதியிலே நின்றதடி பாழ்பட்ட பயணம்
பாடையிலே போகவைத்த போகத்தின் நயனம்

மலஜல மூட்டை ஒன்பதுவாய் ஓட்டை
மயக்கத்தில் ஏனிந்த மந்திரக் கோட்டை
கலகல எனவரும் வாழ்க்கை ஓடை
கடைசியில் மிஞ்சும் காலற்ற பாடை

யார் தொடங்கி வைத்ததிந்த பயணம்
எதைத் தேடிப் போகுதிந்த பயணம்
மார்தொடங்கி மண்முடியும் அவலத்தின் பயணம்
வடித்தெடுத்த பூமியிலே தேகம்கொளும் சயனம்

- கவிஞர் மஹாரதி

**

பாதையறியா பயணங்கள் கூட முடிவுறும்!
மனிதன் மாண்பு தவறிய பயணம் பாதியிலே முறியும்! 

உணர்வறியா உறவினால் காதல் முறியும்!
மதிப்பறியா மனதினால் உறவு முறியும்!
கேடுகெட்ட மதியினால் நட்பு முறியும்!
சூட்சம புத்தியினால் சுற்றம் முறியும்!

வழியறியா பயணம் பல உண்டு வாழ்வில்! 
அதை கடந்து சென்றால் வெற்றி!
தடுக்கி நின்றால் அனுபவம்!
சிலிர்த்து நின்றால் ஆர்வம்!
சோர்ந்து தங்கினால் தோல்வி! 
முறிந்து போகும் பயணம் முற்றிடுவதில்லை! 

சினம் காத்து, நாவடக்கி திட்பம் சரியாக அமைவின் எப்பயணமும் நில்லா! 
அப்படியேனும் நிற்பின் அதற்கான விடை காலத்திடம் உண்டு! 
கனியும் காலத்திடம் கணக்கும் உண்டு! 

விடை நோக்கி காத்திருப்போம்! 

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

பயண மென்பதே ஒரு சுகம் தான் – அது
பாதியில் முறிந்தால் சோகம் தான்!
அயரா(து) உழைக்கும் சூரியன் போல
அன்றாடம் உழைத்தால் வெற்றி தான்!
பயிலும் பள்ளியில் பயணம் என்றே
பாதியில் முறிந்திடின் கவலை தானே!
துயிலா கடல லை நீரதனில் – பளிங்கு
நிலாவின் பார்த்தல் நல்ல மகிழ்ச்சியே!
வானில் பறந்திடும் பறவைப் போல
விண்ணில் பறந்திட வாய்ப்பு கிட்டின்
கானம்பாடி மகிழ்ந்தால் மறுப்பு சேதி
காதில் விழுந்து விட்டால் கவலையே!

- கவிஞர் கே. அசோகன்

**

இலையுடன் பனியின் பயணம்  
வெயில் வரும் வரையே
செடியுடன் பூக்களின் பயணம்  
அதை பறிக்கும் வரையே
அலையுடன் கரையின் பயணம் 
தொட்டு செல்லும் வரையே
இரவுடன் பூமியின் பயணம் 
பொழுது விடியும் வரையே
ரயில் சிநேகம் பயணம் 
முடியும்வரையே 
நட்பின் பயணம் நம்பிக்கை 
உள்ள வரையே
இப்படி அனைத்துமே பாதியில் 
முறிந்த பயணம் எனில் 
நம்மை விண்ணுலகுக்கு 
எடுத்து செல்லும் 
இறப்பு மட்டும் 
விதிவிலக்கா என்ன
அதுவும் நம் வாழ்விலிருந்து 
பாதியில் முறிந்த பயணமே!!

- பிரியா ஸ்ரீதர்

**

ஏதோ நினைத்தேன்,
எதுவோ நடந்தது;
ஊர் பேச்சைக்கேட்டேன்,
துயர் வந்து சேர்ந்தது

அறியாமையில் தவித்தேன்,
அசரீரி குரல் கேட்டது;
உன் வாழ்வை,
நீ வாழு என்றது

யாரோ சொல்வதை,
கேட்பது எதற்கு?
அதனால்ஏற்படும்விளைவுகளுக்கு,
அவரா பொறுப்பு?
உனக்கு பொறுப்புணர்வு
வேண்டாமா என்று கேட்டது ?

உன் மனம் சொல்வது,
உனக்குப்பொருந்தும்;
உளமாற அதைப்போற்று,
வாழ்க்கைப்பயணத்தை 
அதனூடே மாற்று,
என்று பாடம் எடுத்தது

உன் முக்கிய முடிவுகளை,
நீயே எடு;
உன்
மனதைக்கேட்டு!
என,
மனமாற வாழ்த்தியது

ஒருவேளை தப்பாக போனால்கூட,
அது உன் முடிவு தானே;
அடுத்தவரிடம் உன்னை அடகு வைக்காதே,
என்று சுயமரியாதையுணர்வை விதைத்தது

ஊருக்காக உழைப்பது சரி,
ஊர் பேச்சை கேட்டே,
உன் முடிவுகளையெல்லாம்,
எடுப்பது சரியா?
உன் நடவடிக்கைகளையெல்லாம்,
அமைத்துக்கொள்வது சரியா?

தவறான பயணத்தை,
பாதியிலே நிறுத்து,
அதுதானே சிறப்பு;
தீதும் நன்றும்,
பிறர்தர வாரா !
என்று போதித்தது

- ம.சபரிநாத்

**

முறிந்த   பயணம்.
முடியாத   பாதைகள்.
கலைந்த  கனவுகள்.
தொலையாத நினைவுகள்.

எங்கேயும்  எப்போதும்
எதிர்பாராதது  நடக்குமென
ஏற்றுக்கொண்டால் என்றும்
எளிதாகும் வாழ்க்கைப் பயணம்!.

அடுத்தது  என்னயென யோசிக்க
அடுக்கடுக்காக வழி பிறக்கும்!
அடுத்தஅடி  எடுத்து வைக்க
அவை உதவியாக இருக்கும்.!

முடியாது என முனகினால்
முயற்சியது  விலகிடும் !
முடியும் என முயன்றால்
முறிந்தகிளையிலும் பூ மலரும்.!

- கே.ருக்மணி

**
 
ஜாதகங்கள் சாதகமாய்
கோள்களே கோலமிட
முதியோர் முன்னிலையில்
ஜோசியன் ஆசியுடன்
இறைவனை வேண்டி
இணைந்தன இரு மனங்கள் !!
மின்சார உணர்வுகளால்
சம்சார கருப்பையில்
ஒரு வெளிச்சம் !!
மூழ்கிய நீருக்குள் மெதுவாய்
மூச்சு விடத்தொடங்கியது !!
தொப்புளாய் ஒரு கால்வாய் பாசனம் ,
செழிப்புடன் வளர்ந்தது குட்டிப்பயிர் !!
வளர்ச்சி வெள்ளத்திற்கு அணை கட்டிய
அறிவியல் அதிசயம் ஒன்று 
அரக்கனாய் மாறுமோ  –-
தீபத்தின் ஆழத்திலும் ஒரு கருப்பு உண்டு –
இந்த ஸ்கேன் கருவியும் அப்படித்தானோ ?
அமிலம் ஊற்றி
அழித்தனர் அந்தச்செடியை –
பாதியில் பயணம் நிறுத்தி பூமியை தொட்டது --
ஆம் அது பெண் சிசுவாமே !!

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

இருமனம் இணைந்து ஒருமனம் 
உருவாகியது திருமண உறவில் !
அருமையான  வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் 
அந்த இருவருக்கும் !
இனிதே தொடங்கிய ஒரு பயணம் 
முடிந்ததே  ஒரே  நாளில் ! ஒரு சாலையில் !
காரணம் ஆயிரம் சொன்னார் சுற்றமும் நட்பும் !
குறை பல சொன்னார் மற்றவர் மீது !
உரைக்கவில்லயே இன்னும் ஒரு உண்மை 
உறவினருக்கு ! தலைக் கவசம் அணிவது 
ஒரு உயிருக்கு கவசம் என்னும் உண்மை !
கவசம் இருவரும் அணிந்து இருந்தால் 
பாதியில், ஒரு பாதையில் முறிந்து 
முடிந்து இருக்குமா அந்த இருவரின் 
வாழ்க்கைப் பயணம் ?
சற்றே சிந்திக்க வேண்டும்... இரு சக்கர 
வாகனம் ஓட்டும் அனைவரும் ! காவலர் 
கேட்டாலும் கேட்காவிட்டாலும் , அந்த 
தலை கவசம்தான் உங்கள் உயிர் கவசம் !
கவசம் எத்தனை நீங்கள் படித்தாலும் 
மறக்க வேண்டாம் இந்த கவசத்தையும் !

- கே.நட்ராஜ்

**

திட்டம் இடாத பயணங்கள்
திசை மாறிப் போவதுண்டு
பட்டம் வாங்கிடும் வேளையிலும்
பலர் பயணத்தில் தடைக்கற்கள்
பலானதாய் வருவதுண்டு.

பாதியில் முறிந்த பயணங்களில்
பலர் வாழ்க்கைகூட இழந்ததுண்டு
பகட்டு வாழ்க்கையைப் பற்றியதால்
பலர் வாழ்வில் பயணம் முடிந்ததுண்டு 

உறவுப்பாதைகள் அறிந்தவர்க்கு 
உள்ளம் உத்தமப்பயணங்கள் புரிந்ததுண்டு
நிலைமை தலைகீழாய் மாறியதால்
நித்தம் சித்தம் தடுமாறும்பயணமுண்டு

பாதை தவறிய வேளையிலும்
பாங்குடன் எல்லாமே  நடப்பதுண்டு
பட்டப் படிப்புகள் இல்லாத சிலருக்கும்
பணம் பதவி உயர்வுகள் வருவதுண்டு.

ஆதியில் திறம்படத் திட்டமிட்டால்
பாதியில் பயணங்கள் முடிவதில்லை
வீதியில் பாதையை மாற்றிவிட்டால்
விபரீதங்கள் வருவதில் சிக்கலில்லை.

பரமனை மறவாமல் துதித்தவர்க்கு
பாதையில் பயணத்தில் சிக்கலில்லை
பயணங்கள் திசைமாறிப்போனாலும்
பாதியிலும்  ஆதியிலும் முடிவினிலும் 
பயம்தரும் தோல்வியே இல்லையே!.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்

**

வேலையில்லா திண்டாட்டம் 
வெளி நாடு புறப்படும் சமயம் அது
பாதியில் முறிந்த பயணம் ஆனது
வீடு காக்கும் எண்ணமிருப்பின்
சோடு தைத்தாலும் வாழலாம் 
பட்டதாரியானாலும் இரும்படி 
பட்டறையில் உடம்பு சொட்டு
வியர்வை விட்டாலும் வாழலாம் 
இளகாத இரும்பைக் கூட இளக்கி 
அக் கிடைக்காத வேலையை நம்பி 
அன்றாட வயிற்று பிழைப்பே 
கெடவிடலாமா
பாதியில் முறிந்த பயணம் அதை 
எண்ணிக் கவலை தான் படலாமா 
வெளிநாட்டு வேலை மோகமதை 
விட்டுவிட்டு சுயமாயொரு 
திட்டமதை தீட்டிக் கொண்டு 
தானே ஒரு வட்டத்தை
வகுத்துக்கொண்டு நாலு பேர்க்கு
நீயே வேலை போட்டுத் தரலாமே 
கற்ற அறிவுக்கு வேலை கொடு
நானும் முதலாளி எனும் பெயரெடு 
ஆழ்ந்து யோசிக்க சற்று ஓய்வு எடு 
மன சஞ்சலத்தை விடு தவிக்கும் 
பேர்கள் கண் ஜலத்தை துடைத்திடு

- ஆபிரகாம் வேளாங்கண்ணி 

**

பணமில்லாமல் பாதியில் படிப்பை நிறுத்தும் 
மாணவரின் கல்விப் பயணம்

நட்டத்தால் தொழிலை பாதியில் நிறுத்தும்
தொழில் முனைவோரின் பயணம்

திறமைக்கு மதிப்பு கிடைக்காததால் வேலையை 
விடும் தொழிலாளியின் வேலை பயணம்

காதலர்களின் புரிதல் இல்லாமையால் பாதியில்
முறியும் காதலர்களின் காதல் பயணம்

கருக் கலைவால் பாதியில் முடியும்
குழந்தையின் பயணம்

குதிரை பேரம் படியாததால் ஆட்சி கவிழ்ப்பால்
முடியும் அரசியல்வாதிகளின் ஆட்சி்ப் பயணம்

லஞ்சம் வாங்கும்போது பிடிபடுவதால் முடியும் 
அரசு அதிகாரிகளின் அரசுப் பணி பயணம்

இவ்வளவு பயணங்கள் பாதியில் முறிந்தாலும் .............. 

விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களின் அப்பாவித்தனமான பயணம்
வாக்காளர்களின் வாக்களிக்கும் ஏமாற்றமான தேர்தல் பயணம்
ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல் பயணம்
லஞ்சத்தில் ஊறித் திளைத்த அதிகாரிகளின் லஞ்சப் பயணம்
குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலைப் பயணம்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மனித மிருகங்களின் காட்டு மிராண்டிப் பயணம்

இவர்களின் இத்தகைய பயணம் என்று தான்
பாதியில் முறிந்த பயணமாகப் போகின்றதோ ? 

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

காதலித்தேன் வாழத்தான் , வாழ்வை காவு கொடுக்க அல்ல
காலத்தால் அழியாத காதலென்றாய் நீ ஆதரித்தேன் நான்
மோதலிலும் காதல் வரும் என்பார் அது போல
நம்மிடையே மலர்ந்தது அந்த பாழாய்போன காதல்
மோகத்தால் வந்த காதல் அல்ல அது முழுதானது
முக வசீகரத்தால் வந்த லகாதல் அல்ல இது
வேகத்தால் வந்த காதல் அல்ல, விவேகமாய் ஆனது
இணைந்த கோடுகளாய் ஆவோம் என்றாய் நீ
இருகோடுகளாய் ஆகிப்போனோம் நாமிருவரும்
இணைந்தபோது என்னனனவோ பேசினோம் மெரினாவில்
எழுச்சிப் போராட்டத்தில் வேறெதும் தெரியவில்லை  
எதுவுமே  நம்  கண்ணுக்குத் தெரியவில்லை, கருத்துக்கும்
இந்த நேரத்தில் நமது பெற்றோருக்கும் , மற்றவர்க்கும்
யாருக்கும் நாம் போராட போவது பிக்க வில்லை
அன்பாக அமதியாக பாதுகாப்பாக, மகிழ்வாக வாழ ஆசை!
போராட்டக் நடகிறது போவோம் வா என்றாய் நீ!
பின்வாங்கி விட்டேன் பாதியில் முறிந்தது பயணம்
கொழைத்தனம் என்று நீ சொன்னாலும் பரவாயில்லை
இந்தத்தருணத்தில் மன்னிக வேண்டுகின்றேன் போ1
பாதியில் முடிந்தது பயணம் புறப்படுவாய் என்றாள்!

- கவிஞர் அரங்க.மணி

**

வாழ்க்கை  என்பதும்  பயணம்தான்…
வாழும்வரை பயணம் தொடரும்தான்…
கடக்கும்வழிகள் எல்லாம் அனுபவம்தான்…
காலமும்நமக்கு உணர்த்தும் பாடம்தான்…
இரவும்பகலும்  நாளும்  வந்துபோகும்…
இந்தநேரமும்  நாளை  மாறிப்போகும்...
தவறுகளை  தோல்வியும்  திருத்திப்போகும்...
தடைகளை  வெற்றியும்  தாண்டிப்போகும்…
மரணமும்  ஓர்நாள்நம்  வாழ்வில்வந்தது...
மரணம்தான் மனிதனை இறுதியில்வென்றது…
பயணமும்  தொடராதுஎன்பது தெரிந்தது...
பயணமும் இங்கேபாதியில் முறிந்தது...

- கவிஞர் நா. நடராசு

**

வெடித்த பாதம் 
வெயில் தொடும் முன்! 
வேகமாய் 
விறகு எடுத்து தலையில் 
முந்தானை சிம்மாடாகிடும்! 
அடகு வைத்த குடும்ப அட்டை 
அடிவயிற்று பசி தீர்த்திட வழியில்லை! 
பத்து பாத்திரம் தேய்க்கும் வீட்டு மீதமே 
அனுதினம் அம்மா தரும் அமிர்த உணவு!
விட்டு விலகிப்போன அப்பா நினைவாய் 
தொங்கிடும் தாலி கயிற்று ஊக்கு அறுந்த 
மஞ்சள் பைக்கு காதாகிடும் கல்வி புத்தகம் சுமக்க! 
காடு மலை ஓடி 
காந்தி தாள் தேடி அன்னை சேர்த்த 
சேமிப்பு பட்டம் பெற்று தந்தது! 
ஊர் போற்றும்
உயர்ந்த வேலை கைநிறைய 
சம்பளம் யென்று புகழ் உச்சி சென்ற எனை!
பாரட்டிட வேண்டியவள் 
பயணத்தை பாதியில் முறித்து 
மூங்கில் கட்டிலில் படுத்தால்! 
பசிக்கு
பாலூட்டியவள் பாழாய்ப்போன புற்றுநோயால்! 

- தஞ்சை. ரீகன்

**

பாதியிலே முறிந்த பயணம் என்றால்
..........பயணமும் முடியாப் பலனும் இல்லை.!
வீதியிலே செல்லும் போதில் கூட
..........விதியென்று வந்தால் வழியும் மாறும்.!

ஆதியுடன் அந்தம் அறியாப் போகும்
..........அர்த்தமற்ற பயணம் அதுவே வாழ்வு.!
நாதியற்றுப் போனேன் நானும் என்றே
..........நாள்முழுதும் புலம்பி நைந்து போவார்.!

பாதியிலே முறிந்த பயணம் போல்தான்
..........பலருக்கும் அமையாப் பண்பாய் வாழ்வு.!
நீதிகேட்டு தினமும் நாடும் மன்றம்
..........நெடுங்காலம் சென்ற நெடிய பயணம்.!

வாதிட்டு வென்று வாகை சூட்ட
..........வகையில்லை யதுவே வாழ்க்கைப் பாடம்.!
மாதிரிக்குப் பலவும் மனதில் உண்டு
..........மறையாது இன்னும் மறக்க வில்லை.!


மேதினியில் நாமும் மேன்மை பெற்று
..........மேன்மையாக வாழ மனதில் தோன்றும்.!
ஆதிமுதல் உழலும் அனைத்துத் துன்பம்
..........அடியோடு அகற்ற ஆர்வம் எழும்.!

பாதியில் முறிந்த பயணம் என்றால்
..........பயமிலாமல் மனதும் பாடம் கற்கும்.!
போதிமர நிழலில் புத்தனும் பெற்ற
..........போதனைகள் போலப் பின்னும் வேண்டும்.!

- பெருவை பார்த்தசாரதி

**
நெட்டி முறித்து
நிமிர்ந் தெழுந்து
காலைக் கடமைகள்
கழித்து;
இயந்திரக் குதிரையை
இயக்கி; - இராம
பாணமாய் விரைந்து;
இல்லற துணை தேடி
முல்லை மனத்தோடு
முழுமை நினைவோடு
பள்ளம் பாராமல்
பதறி விழுந்ததில்
பரமனைத் தேடும்
ஆவியாய்; நிகழை
மறந்து நினைவிலாடி
வில்லினை முறித்து
இராமன் வென்றான்;
பயணத்தை முறித்து
பாதையை யிழந்தேன்....

- ப.வீரக்குமார்

**
வெளிநாட்டு வேலை
வெல்லும் வாழ்க்கை
துள்ளிய உள்ளம்
துரிதம் வெள்ளம்
பச்சை வயல்கள் மறந்து
பசுந்தளிர் மனங்கள் மறந்து
செவ்விதழி மனையாள்
சொந்தம் விலக்கி
வேலையனுமதி, பயணச்சீட்டு பெற்று;
பறந்தேன் ; புதிதாய்
ஒரு புத்துலகம் காண;
இறங்கிய நிலையில்
எனக்கான முகவர்
எழில் பதாகை சுமந்து
ஏற்றமாய் பார்த்து;

பணிக்குச் சென்றேன்
ஊதியத் தகராறில்- என்
கடவுச்சீட்டை எரித்த
கணக்காளனால்;

எப்படி திரும்புவேன்
என்புவி தேடி
கையில் காசுமில்லை
தெரியாத பாட்டையிலே!!! ....

- முகில் வீர உமேஷ்

**
கருவறையில் தொடங்கி 
கல்லறையில் அடங்குவது
மனிதனின் 
வாழ்க்கைப் பயணம்!
சுற்றியடிக்கும் சுனாமி புயலால் 
பாதியில் முறிகிறது 
பலர் வாழ்க்கைப் பயணம்!

சிந்தனையாளனை 
உருவாக்கத் தொடங்கும் 
கல்விப் பயணத்தை
தேர்வு என்னும் அரக்கன் 
சிறைபிடிப்பதால் 
பலருக்கு பாதியில் முறிந்த பயணமாகிறது
கல்விப் பயணம்! 

காதலித்து கரம் பிடிக்கும் 
இளைஞர் கூட்டம் 
இறுதிவரை 
வாழ்க்கை நடத்தினால் 
வெற்றிப்பயணம்!
இடையில் வழக்கு நடத்தினால்
வாழ்க்கையாகும் 
பாதியில் முறிந்த 
வெற்றுப் பயணம்!

கடைமடை அடையா 
காவிரிப் பயணத்தால்
பாதியில் முறிந்த பயணமாகிறது
பயிர்களின் பயணம்!

மனிதனுக்குள் 
அடிக்கடி நிகழும் மதுப் பயணத்தால்
பாதியில் முறிந்து போகிறது 
பலர் வாழ்கை பயணம்!

ஏழைகளின் நிலத்தை பிடுங்கி அமைப்பது 
எட்டு வழிச்சாலையல்ல-அது 
அவர்களின் கடைசி வழிச்சாலை!

எரிபொருள் விலையை 
ஆகாயத்தில் பறக்க விட்டு விட்டு
ஏழைகள் பயணத்தை 
பாதியில் முறித்த மத்திய அரசு! 
ஏழைகளை 
ஆகாயத்தில் பயணிக்க வைப்பதே 
நோக்கம் என்கிறது!

-கு.முருகேசன்

**

திங்கள் கிழமை

ஞாயிற்றுக்கிழமை பார்த்த 
திரைப்படங்களை 
அசை போடக் கழிந்தது - 
அரை நாள் - என்ன செய்வது 
என யோசிக்க முடியும் முழு நாள் .

செவ்வாய்க்கிழமை

டி.வி. நாடகம் அதே மாமியார் மருமகள்
வரதட்சனைக் கொடுமை
பிழிந்து அழுது கண் துடைத்தாலோ - 
கரைந்து போகும் இன்னொரு தினமும்

புதன் கிழமை

புத்தி வந்தது - படிக்க நினைத்து புக்கை திறந்தால்
பவர் கட் - அன்றைய தினமும் ஆஃப் ஆனது.

வியாழக் கிழமை

வெளியே சத்தம், எட்டிப் பார்த்தால் 
குடும்பச் சண்டை, 
முழுவதும் பார்த்ததில் முடிந்தது ஒரு நாள் 

வெள்ளிக்கிழமை

மாரியம்மன் கோவில்,
மாவிளக்கு ஊர்வலம்
ஜெக ஜோதியாய் கழிந்தது தினமது

சனிக்கிழமை

மாமா பெண் பாமா விஜயம்,
ஆஞ்சனேயர் கோவிலும்
ஐஸ்கிரீம் பார்லரும், 
காதலோடு கழிந்தது - படிக்க முடியாமல்

ஞாயிற்றுக்கிழமை

சலூனில் ஏகப்பட்ட கூட்டம் - காத்திருந்து முடிவெட்ட
கடைக்குப் போக, காய்கறி வாங்க,
கிழிந்த நோட்புக் அட்டை மாற்ற

இப்படி எல்லா தினங்களும் எப்படியோ - கழிந்து விடவே

இறைவா - எங்களுக்கு இன்னும் 
நிறைய கிழமைகளைக் கொடு,
நாங்கள் படிக்க வேண்டும்
இப்படிக்கு கல்விப் பயணம் 
பாதியில் முறிந்த மாணவர்கள்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

எல்லாம் நல்லா நடக்குமுன்னே! 
எங்கும் இல்லா நாடகமிங்கே! 
பெரியோரெல்லாம் கூடி பேசி 
முடிச்ச கல்யாணம்! 
காதலோ,கலப்பு கல்யானமோயில்ல! 
ஊடல்,கூடல் கலந்த கலவியால்! 
காதலின்பம் பெற்றதே மழலையாய்! 
யார் கண் பட்டதோ சிக்கலில் 
வீழ்ந்ததே மணவாழ்வும்! 
கோபமும், வெறுப்பும்  குறையவில்லையே! 
காலமெல்லாம் சேர்ந்து வாழும் பந்தம்! 
கோலமெல்லாம் கலைந்து காணும் பிம்பம்! 
உப்புசப்பு ஒன்னுமில்லா காரணத்துக்கு, 
ஒப்பில்லாத வாழ்வைத் தொலைக்கும் 
உறவிதா? மனமென்ன உடையும் 
கண்ணாடியா?  உடைந்தால் அது ஒட்டுமா?  
குடும்ப நீதிமன்றத்தை நாடுகிறாய்? 
பேச்சுவார்த்தையா, விவாகரத்தா, 
மணமுறிவா? சிறுவயது 
கண்ணாமூச்சி ஆட்டமா?     
பொறுமையுடன் அமைதியாய் 
யோசித்துப்பார்! 
பாதியில் முறிந்த பயணமா?  
கொலம்பஸ் தடைகளை வென்றிடவே 
கண்டான் புதிய பயணங்களே! 
மண்ணில் மீண்டுமொருமுறை 
பிறக்கப் போவதில்லை!  
போதும் பாதியில் முறிந்த பயணம்! 

- ஆகாசம்பட்டு A.k.சேகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com