நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1,2

தனித்துவமான திருமேனி
நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1,2

பாடல் - 1

ஏறுஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறுஆளும் தனி உடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும்படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.

எருதை வாகனமாகக் கொண்ட சிவன், பிரம்மன், திருமகள் ஆகியோர் எம்பெருமானுடைய திருமேனியின் ஒரு பகுதியாகத் திகழ்கிறார்கள், அப்படிப்பட்ட தனித்துவமான திருமேனியைக் கொண்டவன், தன்னுடைய ஆயுதத்தால் அசுரர்கள் குலத்தோடு சாம்பலாகும்படி செய்தவன், அத்தகைய பெருமான், என்னுடைய அழகிய மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்த நிறத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

******

பாடல் - 2

மணிமாமை குறை இல்லா மலர் மாதர் உறைமார்பன்,
அணி மானத் தடவரைத் தோள், அடல் ஆழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறை இலமே.

அழகிய மாமை நிறம் எப்போதும் குறையாதவள், தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகள், அப்பெருமாட்டி தங்குகிற மார்பைக் கொண்டவன் எம்பெருமான், அழகிய, பெருமை பொருந்திய, பெரிய, மலைபோன்ற தோள்களைக் கொண்டவன், வலிமையான சக்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன், அவனுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்யங்களில் நான் எந்தக் குறையும் வைக்காதபடி என்னை அடிமையாக்கிக் கொண்டவன், நீலமணி போன்ற நிறம் கொண்ட மாயன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என்னுடைய அழகிய நெஞ்சைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்த நெஞ்சால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com