நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

மார்பைக் கிழித்து
நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

கிளர் ஒளியில் குறைஇல்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி, வலம்புரியன், மணிநீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறைஇலமே.

கிளர்ந்த ஒளி நிறைந்த நரசிம்ம அவதாரம் எடுத்து, கிளர்ந்து எழுந்து, கிளர்ந்த ஒளியுடைய இரணியனின் அகன்ற மார்பைக் கிழித்து மகிழ்ந்த பெருமான், வளர்ந்துகொண்டே செல்லும் ஒளியோடு பொலிகின்ற சக்ராயுதத்தையும், வலம்புரிச் சங்கையும் ஏந்தியவன், நீலமணிபோன்ற, வளர்ந்துகொண்டே செல்லும் ஒளியைக்கொண்டவன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என்னுடைய வரிவளையல்களைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த வரிவளையல்களால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

******

பாடல் - 8

வரிவளையால் குறைஇல்லாப் பெருமுழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவுஅரிய சிவன், பிரமன், அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறைஇலமே.

முன்பு ஒருநாள், பெரிய நிலத்தில் உள்ளவர்களின் துயரத்தைத் தீர்ப்பதற்காக, வரிகளை உடைய தன்னுடைய சங்கிலே மிகுந்த, பெரிய முழக்கம் எழும்படி ஊதினான், அதனால் பகைவர்களை அச்சம் என்கிற நெருப்பிலே தள்ளினான், அறிவதற்கு அரியவர்களான சிவன், பிரமன், இந்திரன் போன்றவர்கள் பணிந்து போற்றுகிற பெருமான், விரிந்துகொண்டே செல்லும் புகழைக்கொண்டவன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என்னுடைய மேகலையைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த மேகலையால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com