நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பூமியைச் சூழ்ந்திருக்கிறது
நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

வாங்குநீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு, இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கு இதன்மேல் வெம் நரகம், இவை என்ன உலகு இயற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா, அடியேனை மறுக்கேலே.

இந்த உலகத்தின் இயல்பு, எல்லா நிலப்பரப்புகளையும் தனக்குள் வாங்கிக்கொள்ளவல்ல கடலானது பூமியைச் சூழ்ந்திருக்கிறது, அங்கே மலர்ந்த தாவரங்கள், திரிகின்ற மிருகங்கள், மனிதர்கள் என எல்லா உயிர்களும் பிறப்பு, இறப்பு, நோய், முதுமை ஆகியவற்றால் வாடுகின்றன, இதற்குமேல் கொடிய நரகமும் உள்ளது. மணிவண்ணா, நீ என்னை ஏற்றுக்கொள், என்னைக் கலங்கச் செய்யாதே.

******

பாடல் - 6

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைந்திட்டுக் கொன்று உண்பர்,
அறப்பொருளை அறிந்து ஓரார், இவை என்ன உலகு இயற்கை!
வெறித் துளவ முடியானே, வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய், இனி என் ஆர் அமுதே, கூய் அருளாயே.

இந்த உலகத்தின் இயல்பு, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கலங்கச் செய்கிறார்கள், அவர்களை வலிமையான வலையிலே சிக்கவைத்து, சித்திரவதை செய்து, கொன்று, அவர்களுடைய பொருள்களால் இவர்கள் பிழைக்கிறார்கள், இவர்கள் யாரும் தர்மப்பொருளை அறிவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை, நறுமணம் வீசும் திருத்துழாய் மாலை அணிந்த பெருமானே, தீவினைகள் புரிந்தவனான என்னை உன்னுடைய அடிமையாக்கிக் கொண்டாய், இனி, என்னுடைய அரிய அமுதமான நீ என்னைக் கூப்பிட்டு அருள்செய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com