நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

அவற்றைப் படைத்தான்
நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்
                                                                                             படைத்தான்,
குன்றம்போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே.

அன்றைக்கு, தேவர்கள், உலகம், உயிர், மற்ற எதுவும் இல்லாத நேரத்தில், எம்பெருமான் அவற்றைப் படைத்தான், நான்முகனான பிரம்மனையும் பிற தேவர்களையும் இந்த உலகையும் உயிர்களையும் உருவாக்கினான், குன்றுபோல் அழகிய மாடங்கள் உயர்ந்துநிற்கும் திருக்குருகூரிலே அப்பெருமான் ஆதிப்பிரானாக நிற்கிறான், பிறகு எதற்கு நீங்கள் வேறு தெய்வங்களை நாடுகிறீர்கள்? (அவனையே வணங்குங்கள்).

******

பாடல் - 2

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்
                                                                                 படைத்தான்,
வீடுஇல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான், அவன் மேவி
                                                                                 உறைகோயில்,
மாடமாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடிப் பரவிச் செல்மின்கள், பல்லுலகீர், பரந்தே.

நீங்கள் நாடிச்சென்று வணங்குகிற தெய்வங்களையும் உங்களையும் முன்பே படைத்தவன் எம்பெருமான், குறையாத சிறப்பும் புகழும் நிறைந்த ஆதிப்பிரான், அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், மாடமாளிகைகள் சூழ்ந்து அழகுசெய்யும் திருக்குருகூர், இந்த உலகில் உள்ள பலப்பல மக்களே, அந்தத் திருக்குருகூரைப்பற்றிப் பாடுங்கள், ஆடுங்கள், போற்றியபடி அங்கே சென்று வணங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com