ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

தீவினை செய்தவளான
ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

பொன் உலகு ஆளோரோ, புவனி முழுது
                                                        ஆளோரோ,
நல் நலப் புள் இனங்காள், வினையாட்டியேன்
                                                        நான் இரந்தேன்,
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன்,
                                                        கண்ணன்,
என் நலம் கொண்ட பிரான்தனக்கு என் நிலைமை
                                                        உரைத்தே.

நல்ல குணங்களைக்கொண்ட பறவைக்கூட்டங்களே, தீவினை செய்தவளான நான் உங்களிடம் ஓர் உதவி கேட்கிறேன், செய்வீர்களா? முன்பு உலகங்கள் அனைத்தையும் படைத்தவன், மேகவண்ணன், கண்ணன், என்னுடைய நலனைக் கொண்டுசென்ற பிரான், அவனைச் சந்தித்து என் நிலைமையைச் சொல்லுங்கள், அப்படிச்செய்தால், நீங்கள் பரமபதத்தையும், மற்ற உலகங்களையும் ஆள்வீர்கள்.

***

பாட்ல் - 2

மை அமர் வாள் நெடும்கண் மங்கைமார்
                                      முன்புஎன் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு
                                     மேவீரோ,
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப்
                                     பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லி, கிளிகாள்,
                                    விரைந்து ஓடி வந்தே.

கிளிகளே, கையிலே சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமான், கனிபோன்ற திருவாயைக்கொண்டவன், அந்தப் பெருமானைக் கண்டு வாருங்கள், அவருடைய திருமேனியைத் தழுவ விரும்பும் என் காதலை அவரிடம் சொல்லிவிட்டு விரைந்தோடி வாருங்கள், அப்படிச் செய்தீர்களென்றால், நான் உங்களுக்கு என்ன பரிசு தருவேன் தெரியுமா? மையிட்ட, ஒளிபொருந்திய, நீண்ட கண்களையுடைய என் தோழிகளுக்கு நடுவே, உங்களை என் கையிலே அமரவைத்து, நெய்யுடன் கூடிய இனிய உணவையும் பாலையும் தினந்தோறும் தருவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com