ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

வலிமையான சார்ங்கம்
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு
                                                         வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே
                                                         போன முதல்வாவோ,
திணர்ஆர் மேகம் எனக் களிறு சேரும்
                                                         திருவேங்கடத்தானே,
திணர்ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன்
                                                        எந்நாளே.

(ராமனாக அவதரித்தபோது,) சேர்ந்து நின்ற ஏழு மராமரங்களையும் அன்று சுக்ரீவனுக்காகத் துளைத்த ஒப்பற்ற வில்வீரனே, (கண்ணனாக அவதரித்தபோது,) சேர்ந்துநின்ற இரு மரங்களின் நடுவில் சென்று அவற்றை முறித்த முதல்வனே, வலிமையான மேகத்தைப்போன்ற யானைகள் சேரும் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவனே, வலிமையான சார்ங்கம் எனும் வில்லை ஏந்திய உன்னுடைய திருவடிகளை நான் சேர்வது என்றைக்கு?

***

பாடல் - 6

எந்நாளே நாம் மண் அளந்த இணைத்தாமரைகள்
                                                              காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று, இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி
                                                             இனம் இனமாய்
மெய், நா, மனத்தால் வழிபாடு செய்யும்
                                                             திருவேங்கடத்தானே,
மெய் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன்
                                                             மேவுவதே?

தேவர்களெல்லாம் ‘உலகை அளந்த பெருமானின் தாமரைபோன்ற இணைத்திருவடிகளை நாம் என்றைக்குக் காண்போமோ?’ என்று போற்றி, இறைஞ்சி, கூட்டம்கூட்டமாக வந்து, உடலால், நாவால், மனத்தால் வழிபடுகின்ற திருவேங்கடத்தானே, உன்னுடைய அடியவனான நான், உன்னுடைய திருவடிகளை உண்மையாகவே வந்தடையும் நாள் என்றைக்கு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com