ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பகைவரைக் கொல்லும்
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே,
                                       இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் உடையானே, கோலக்
                                      கனிவாய்ப் பெருமானே,
செடிஆர் வினைகள் தீர்மருந்தே, திருவேங்கடத்து
                                     எம்பெருமானே,
நொடிஆர் பொழுதும் உன பாதம் காண
                                    நோலாது ஆற்றேனே.

எம்பெருமானே, நான் அடைந்து அனுபவிக்கின்ற அமுதமே, தேவர்களின் அதிபதியே, பகைவரைக் கொல்லும் கருடனைக் கொடியில் கொண்டவனே, அழகிய, கனிபோன்ற திருவாயைக்கொண்ட பெருமானே, துன்பம்தரும் வினைகளைத் தீர்க்கும் மருந்தே, திருவேங்கடத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, உன்னுடைய திருவடிகளைக் காண நான் எந்த நோன்பும் செய்யவில்லை, ஆனாலும், அந்தப் பாக்கியத்தைப் பெறவேண்டும் என்று விரும்புகிறேன், உன்னைப் பிரிந்து ஒருநொடியைக்கூட
என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

***

பாடல் -  8

நோலாது ஆற்றேன் உன பாதம் காண
                                        என்று நுண் உணர்வின்
நீல்ஆர் கண்டத்து அம்மானும் நிறை
                                        நான்முகனும் இந்திரனும்
சேல்ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்
                                       திருவேங்கடத்தானே,
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய்போலே
                                       வாராதாய்.

எம்பெருமானே, நுட்பமான அறிவைக்கொண்ட நீலகண்டரான சிவபெருமான், குறைவில்லாத பிரம்மதேவர், இந்திரன் ஆகியோரும் உன்னுடைய திருவடிகளைக் காண விரும்புகிறார்கள், அதற்காக நோன்புசெய்யவில்லையே என்று வருந்துகிறார்கள், மீன்போன்ற கண்களைக்கொண்ட பல பெண்கள் உன்னைச் சூழ்ந்து வணங்க விரும்புகின்ற திருவேங்கடத்தானே, அவர்களையெல்லாம் மயக்குவதற்காக நீ அவதாரமெடுத்தாயே, அதுபோல, எனக்கும் காட்சிதருவாய், அருள்புரிவாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com