ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

உருகி நிற்பதே
ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன்
                                  குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து
                                  அருள்கண்டாய்,
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன,
                                 செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய், என் கண்ணா, என்
                                 பரம் சுடரே.

இந்த உலகங்களையும், அவற்றில் இயங்குகிற, நிற்கிற பொருள்கள் அனைத்தையும் முதன்முதலாகப் படைத்தவனே, என் கண்ணா, என் பரஞ்சுடரே, ஒருவருடைய குலத்தையே அழிக்கக்கூடியது அவர் செய்கிற தீவினை, அந்தக் கொடிய, வலிமையான குழியிலே தள்ளுகிற ஐந்து இந்திரியங்களை நான் அழிக்கவேண்டும், அவற்றின் பலத்தைக் கெடுக்கவேண்டும், அவற்றின் ஆதிக்கத்திலிருந்து அடியோடு விடுபடவேண்டும், அந்த வரத்தைத் தந்து அருள்வாய்.

***

பாடல் - 10

என் பரம் சுடரே என்று உன்னை அலற்றி
                                    உன் இணைத் தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து
                                  எற்றுகின்றனர்,
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ.

‘என் பரஞ்சுடரே, முன்பு பாற்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியே’ என்றெல்லாம் உன் புகழைப் பாடி, உன்னுடைய தாமரைத் திருவடிகளின்மீது அன்பு செலுத்தி உருகி நிற்பதே என் விருப்பம், ஆனால் நீயோ, எனக்கு உடலாகிய சும்மாடு தந்தாய். ஐந்து இந்திரியங்களும் அதன்மீது வலிமையான பாரங்களை ஏற்றித் திசைதோறும் இழுத்துத் தாக்குகிறார்கள். நான் என்ன செய்வேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com