நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3,4 

நெருப்பைத் தழுவுகிறாள்
நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3,4 

பாடல் - 3

அறியும் செந்தீயைத் தழுவி, அச்சுதன் என்னும், மெய் வேவாள்,
எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும், வினையுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?

(தாய் சொல்கிறார்)

சுடும் எனத் தெரிந்தும்கூட, சிவந்த நெருப்பைத் தழுவுகிறாள் என் மகள், ‘அச்சுதனே’ என்கிறாள், அதனால் அவளுடைய உடலைச் சூடு ஒன்றும் செய்வதில்லை, வீசுகின்ற, குளிர்ந்த காற்றைத் தழுவுகிறாள், ‘என்னுடைய கோவிந்தன்’ என்கிறாள், துளசிமலர் நறுமணத்தோடு நிற்கிறாள், தீவினை செய்தவளாகிய நான் பெற்ற மகள், செறிந்த வளையல்களை அணிந்த முன்கையைக் கொண்ட சிறு மான்போன்ற பெண், இப்படி எம்பெருமானை எண்ணி என் கண்முன்னே அவள் செய்கிறவை ஒன்றா, இரண்டா! (பல!)

******

பாடல் - 4

ஒன்றிய திங்களைக்காட்டி ஒளிமணிவண்ணனே என்னும்,
நின்ற குன்றத்தினை நோக்கி, நெடுமாலே வா என்று கூவும்,
நன்று பெய்யும் மழைகாணில் நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.

(தாய் சொல்கிறார்)

எல்லாக் கலைகளும் நிறைந்த சந்திரனைக் காட்டி, ‘ஒளி நிறைந்த மணிபோன்ற வண்ணமுள்ளவனே’ என்று கூவுவாள் என் மகள், நிற்கும் மலையை நோக்கி, ‘நெடுமாலே, வா’ என்று அழைப்பாள், நன்றாக மழைபெய்யும் மேகத்தைக் கண்டு, ‘நாரணன் வந்துவிட்டான்’ என்று ஆடி மகிழ்வாள், மென்மையான என் மகளை எம்பெருமான் இப்படியெல்லாம் மயங்கச்செய்துள்ளாரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com