நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பாடல் - 5,6

சொல்மாலை சூட்டி
நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பாடல் - 5,6

பாடல் - 5

ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்
ஏற்றை, எல்லாப் பொருளும் விரித்தானை, எம்மான்தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.

தன்னுடைய நல்ல குணங்களைப் பக்தர்கள் தாங்கிக்கொள்ளும்வண்ணம் சிறிது சிறிதாகக் காட்டுகிற அம்மான், அமரர்களின் தலைவன், கீதை போன்ற பெரும் உண்மைகள் அனைத்தையும் விரித்து உரைத்தவன், என் தலைவன், அத்தகைய பெருமானுக்குச் சொல்மாலை சூட்டி, அவனைப் போற்றி ஒவ்வொரு நாளும் மகிழ்ந்தேன். அதனால், என்னுடைய வினைநோய்கள் அனைத்தும் காற்றைவிட வேகமாகக் கரிந்துவிட்டன / தீர்ந்துவிட்டன.

*******

பாடல் - 6

கரிய மேன்மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடம்கண்ணன், விண்ணோர்
                                                               பெருமான்தனை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி
                                                               உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி
                                                               என்றுமே?

கருத்த மேனியிலே இருக்கும் பெரிய, அழகிய திருக்கண்களிலே பச்சைக்கற்பூரச் சூரணத்தைச் சிறிதளவு இட்டுக்கொள்ளும் பெருமான், விண்ணோர்களின் தலைவன், அந்தப் பெருமானை உரிய சொற்களால் போற்றி இசைமாலைகள் சூட்டினேன், அனுபவித்தேன், இனி இன்றும், என்றும் எனக்குக் கிடைக்காத அரிய பொருள் வேறென்ன? (எதுவுமில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com