மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

நரகத்தின் தலைவன்

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய்,
உலகங்களுமாய்ம்
இன்பம்இல் வெந்நரகுஆகி, இனிய நல்
வான் சுவர்க்கங்களுமாய்,
மன் பல் உயிர்களும் ஆகிப் பலபல
மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று
ஏதும் அல்லல் இலனே.

துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணமாக அமைகிற வினைகள் அவனே, உலகங்கள் அனைத்தின் தலைவன் அவனே, இன்பமில்லாத வெம்மையான நரகத்தின் தலைவன் அவனே, இனிய, நல்ல, உயர்ந்த சுவர்க்கத்தின் தலைவன் அவனே, நிலைத்திருக்கும் பல்வேறு உயிர்களும் அவனே, இப்படிப் பல மாயங்களால் எல்லாரையும் மயக்குவித்து மகிழும் எம்பெருமான் பெரும் விளையாட்டுக்காரன், அவனை இறைவனாகப் பெற்றேன், எனக்குத் துன்பம் ஏதுமில்லை.

•••

பாடல் - 8

அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும்
அழகு அமர் சூழ் ஒளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
ஆகியும் நிற்கும் அம்மான்,
எல்லைஇல் ஞானத்தன், ஞானம் அஃதே கொண்டு
எல்லாக் கருமங்களும் செய்
எல்லைஇல் மாயனை, கண்ணனை, தாள் பற்றி
யான் ஓர் துக்கம் இலனே.

துன்பமில்லாத இன்பமாகத் திகழ்கிறவன், அளவற்ற அழகு நிறைந்து ஒளிமயமாக இருப்பவன், தாமரையிலே வீற்றிருக்கும் திருமகளோடு ஆனந்தமாகவும் அன்பாகவும் திகழ்கிற அம்மான், எல்லையில்லாத ஞானம் கொண்டவன், அந்த ஞானத்தைக்கொண்டே அனைத்தையும் செய்கிறவன், எல்லையில்லாத மாயம் கொண்டவன், கண்ணன், எம்பெருமான், அவனது திருவடிகளைப் பற்றினேன், எனக்குத் துக்கம் ஏதுமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com