மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்!

பங்கயக்கண்ணன் என்கோ,
பவளச்செவ்வாயன் என்கோ,
அம்கதிர் அடியன் என்கோ,
அஞ்சனவண்ணன் என்கோ,
செங்கதிர்முடியன் என்கோ,
திருமறுமார்பன் என்கோ,
சங்குசக்கரத்தன் என்கோ,
சாதிமாணிக்கத்தையே.

உயர்ந்த மாணிக்கம்போன்ற எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்!

தாமரைக்கண்ணன் என்பேனா? பவளம் போன்ற செவ்வாயைக்கொண்டவன் என்பேனா? அழகிய, ஒளிபொருந்திய திருவடிகளைக்கொண்டவன் என்பேனா? மை போன்ற நிறத்தை உடையவன் என்பேனா? சிவந்த ஒளி வீசும் திருமுடியைக்கொண்டவன் என்பேனா? திருமகளும் ஶ்ரீவத்ஸம் என்னும் மறுவும் பொருந்திய மார்பைக்கொண்டவன் என்பேனா? சங்கு, சக்கரம் ஏந்தியவன் என்பேனா?

•••

பாடல் - 4

சாதிமாணிக்கம் என்கோ,
சவிகொள் பொன்முத்தம் என்கோ,
சாதி நல்வயிரம் என்கோ,
தவிவுஇல்சீர் விளக்கம் என்கோ,
ஆதி அம்சோதி என்கோ,
ஆதி அம்புருடன் என்கோ,
ஆதும்இல் காலத்து எந்தை,
அச்சுதன், அமலனையே.

துணையாக யாரும் இல்லாதபோது நமக்குத் தந்தையென வந்த அச்சுதன், அமலனை நான் எப்படி அழைப்பேன்!

உயர்ந்த மாணிக்கம் என்பேனா? ஒளிமிகுந்த பொன் என்பேனா? நீரோட்டமுள்ள முத்து என்பேனா? உயர்ந்த, நல்ல வைரம் என்பேனா? அழியாத ஒளிபொருந்திய விளக்கு என்பேனா? அனைத்துக்கும் முதலாகத் திகழும் அழகிய சோதிவடிவானவன் என்பேனா? அனைத்துக்கும் தலைவனாகத் திகழும் அழகிய பரமபுருடன் என்பேனா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com