மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5

நான்கு வேதங்களின் பயன் என்பேனா?

அச்சுதன், அமலன் என்கோ,
அடியவர் வினைகெடுக்கும்
நச்சு மாமருந்தம் என்கோ,
நலம் கடல்அமுதம் என்கோ,
அச்சுவைக்கட்டி என்கோ,
அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ,
கனி என்கோ, பால் என்கோ.

எம்பெருமானை அச்சுதன், குற்றமற்றவன் என்பேனா? அடியவர்களின் வினைகளைப் போக்கும் விரும்பத்தக்க, உயர்ந்த மருந்து என்பேனா? கடலிலே கிடைக்கும் சிறந்த அமுதம் என்பேனா? அமுதத்தின் சுவையைக்கொண்ட கரும்புக்கட்டி என்பேனா? அறுசுவை உணவு என்பேனா? மிகுந்த சுவையைக்கொண்ட தேன் என்பேனா? கனி என்பேனா? பால் என்பேனா?

•••

பாடல் - 6

பால் என்கோ, நான்கு வேதப்
பயன் என்கோ, சமய நீதி
நூல் என்கோ, நுடங்கு கேள்வி
இசை என்கோ, இவற்றுள் நல்ல
மேல் என்கோ, வினையின் மிக்க
பயன் என்கோ, கண்ணன் என்கோ,
மால் என்கோ, மாயன் என்கோ,
வானவர் ஆதியையே.

வானவர்களின் வாழ்வுக்குக் காரணமாக அமைந்த முதல்வன், எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்!

பால் என்பேனா? நான்கு வேதங்களின் பயன் என்பேனா? சமய நீதிநூல் என்பேனா? மனத்தைச் செலுத்திக் கேட்கும் இசை என்பேனா? இவற்றுக்கெல்லாம் மேம்பட்ட ஒன்று என்பேனா? சிறிது முயற்சி செய்தாலே மிகுந்த பயன் தருகிறவன் என்பேனா? கண்ணன் என்பேனா? மால் என்பேனா? மாயன் என்பேனா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com