ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

ஆண்களில் சிறந்தவனே
ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

போய் இருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு
                                                   உரை நம்பீ, நின் செய்ய
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்,
வேய் இரும் தடம் தோளினார் இத்திருவருள்
                                                  பெறுவார் எவர்கொல்,
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே?

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, எங்களிடம் பொய்யான காரணங்களைச் சொல்லிச் சமாளிக்காதே, உன் குறும்புத்தனத்தை/வஞ்சகத்தை அறியாதவர்களிடம் சென்று இதையெல்லாம் சொல், (அவர்கள் ஒருவேளை இதையெல்லாம் நம்பக்கூடும், நாங்கள் நம்பாமாட்டோம்.) உன்னுடைய கோவைக்கனி போன்ற சிவந்த திருவாயும் திருக்கண்களும் இன்றைக்கு எங்களுக்குத் துன்பமே தருகின்றன, பெரிய கடலைக் கடைந்த பெருமானே, உன்னுடைய திருத்தோள்களால் அணைக்கப்படுகிற திருவருள் யாருக்குக் கிடைக்கும்? மூங்கில் போன்ற பெரிய தோள்களைக்கொண்ட அந்தப் பெண்களுக்குதானே?

******

பாடல் - 4

ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று
                                       நீ கிடந்தாய், உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார், இனி எம்பரமே?
வேலின் நேர் தடம்கண்ணினார் விளையாடு
                                      சூழலைச் சூழவே நின்று
காலிமேய்க்க வல்லாய், எம்மை நீ கழறேலே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) பெருமானே, அன்று ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு, நீண்ட ஆலிலையிலே கிடந்தாய், உன்னுடைய மாயங்களை மேலுலகத்தில் வாழும் வானவரும் அறியமாட்டார்கள், எங்களால் அறியக்கூடுமோ? வேல்போன்ற பெரிய கண்களைக்கொண்ட பெண்கள் விளையாடும் இடங்களில் நின்று பசுக்களை மேய்க்கிறவனே, எங்களிடம் வஞ்சகமான சொற்களைப் பேசவேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com