ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பிரளய வெள்ளத்திலே
ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது,
                                                 கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா, நெடியாய், உனக்கு ஏலும் பிழை பிழையே,
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி,
                                                அதுகேட்கில் என் ஐமார்
தன்மம், பாவம் என்னார், ஒருநான்று தடிபிணக்கே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, எங்கள் கையில் இருக்கும் பொம்மையைப் பறித்துக்கொள்கிறாயே, இது சரிதானா? பிரளய வெள்ளத்திலே அழுந்துகிற உலகத்தை உண்டு காத்தவனே, குற்றமற்றவனே, நெடியவனே, நீயே செய்தாலும் அது குற்றம்தான், குற்றம்தான், எங்களிடம் நீ ஏதேதோ குறும்பான சொற்களைச் சொல்லி விளையாடுகிறாய். இது எங்கள் அண்ணன்மார் காதில் விழுந்தால் என்ன ஆகும்? தர்மம், பாவம் என்றெல்லாம் அவர்கள் பார்க்கமாட்டார்கள், என்றைக்காவது ஒருநாள் தடியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

***

பாடல் - 8

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல்
                                    பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞானமூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப்
                                   போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என்சொல்லார் உகவாதவரே?

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, உலகத்தை நீ வசப்படுத்தி மறைக்கும்போது, அறிவில்லாத பொருள்களையும், அறிவுள்ள பொருள்களையும் ஒன்றாகச் சேர்க்கிறாய், பின்னர் அவற்றை மீண்டும் படைக்கும்போது, அவற்றுக்கு உரிய பிறவிகளைக் கொடுக்கிறாய், இதன்மூலம் அளவில்லாத புகழ்வெள்ளத்தை நீ பெற்றுள்ளாய், அத்தகைய ஒளிமிகுந்த ஞானமூர்த்தியே, எங்களுடைய தோழிமார் எங்களை விளையாட அழைத்தார்கள், நாங்களும் வந்தோம், இங்கே நீ வந்து எங்களை வளைக்கிறாய், வருத்தமடையச்செய்கிறாய், இது சரியா? வேண்டாதவர்கள் இதைப்பார்த்தால் என்னவெல்லாம் சொல்வார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com