ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

நரகமும் அவனே
ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்தபெருமான், என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.

வறுமையும் அவனே, செல்வமும் அவனே, நரகமும் அவனே, சுவர்க்கமும் அவனே, வெல்லவேண்டிய பகையும் அவனே, நட்பும் அவனே, விடமும் அவனே, அமுதமும் அவனே, இப்படிப் பலவகையாகப் பரந்திருக்கிற பெருமான், என்னை ஆள்கிறவன், அத்திருமாலைச் செல்வம் சிறந்துவிளங்கும் குடும்பங்கள் நிறைந்த திருவிண்ணகரிலே நான் கண்டேன்.

***

பாடல் - 2

கண்ட இன்பம், துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டுகோடற்கு அரிய பெருமான், என்னை ஆள்வான் ஊர்,
தெண்திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல் நகரே.

காணுகின்ற இன்பம், துன்பம், கலக்கங்கள், தெளிவு, கோபம், இரக்கம், நெருப்பு, நிழல் என அனைத்துமாகத் திகழும் பெருமான், காண அரியவன், என்னை ஆள்பவன், அத்திருமாலின் ஊர், தெளிவான அலைகளைக்கொண்ட நீரால் சூழப்பட்ட திருவிண்ணகர் என்னும் நல்ல நகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com