ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

மிகுந்த இருளிலே
ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

வேண்டித் தேவர் இரக்க வந்துபிறந்ததும், வீங்கு
                                                           இருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர்
                                                          ஆய்க்குலம் புக்கதும்,
காண்டல்இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச
                                                         வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன், எனக்கு என்ன
                                                        இகல் உள்ளதே?

(எம்பெருமான் உலகைக் காக்க அவதாரம் எடுக்கவேண்டும் என்று) தேவர்கள் வேண்டி இரக்க, கண்ணன் இங்கே வந்து பிறந்தான், (அவனுக்குக் கம்சனால் என்ன கெடுதல் நேருமோ என்று) அவனுடைய அன்னை தேவகி அவனைக் கட்டிக்கொண்டு புலம்பினாள், மிகுந்த இருளிலே அவன் அங்கிருந்து ஆயர்பாடிக்குச் சென்றான், அங்கே கம்சனுக்குத் தெரியாதவண்ணம் வளர்ந்தான், கம்சன் இறக்கும்படி வஞ்சனைசெய்தான், இவற்றையெல்லாம் இன்று நான் சொல்லி அலற்றுகிறேன், எனக்கு யார் விரோதிகள்? (யாருமில்லை.)

***

பாடல் - 6

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும், இமில் ஏறுகள்
                                                                                செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட
                                                                               மற்றும் பல
அகல்கொள் வையம் அளந்த மாயன், என் அப்பன்தன்
                                                                              மாயங்களே
பகல், இராப் பரவப்பெற்றேன் எனக்கு என்ன மனப்
                                                                              பரிப்பே?

பகைமையோடு வந்த பகாசுரன் என்ற பறவையின் வாயைப் பிளந்தான் கண்ணன், திமில்களையுடைய ஏழு காளைகளை வென்றான், உயர்ந்த சோலையிலே வளர்ந்திருந்த குருந்தமரத்தை முறித்தான், அகன்ற உலகத்தை அளந்த மாயன், என் அப்பன் இவ்வாறு இன்னும் பல மாயங்களைச் செய்துள்ளான், அந்த மாயங்களையெல்லாம் நான் இரவும் பகலும் சொல்லித் துதிக்கிறேன், என் மனத்தில் என்ன துக்கம் இருக்கிறது? (ஏதுமில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com