ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

கொடிய வினைகளை
ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

கொடிய வினை யாதும் இலனே என்னும்,
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,
கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'கொடிய வினைகள் எவையும் எனக்கில்லை' என்கிறாள், 'கொடிய வினைகளாக ஆவதும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைச் செய்பவனும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைத் தீர்ப்பவனும் நானே' என்கிறாள், 'கொடியவனான இராவணனின் இலங்கையை அழித்தேனே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பகைவர்களுக்குக் கொடுமையைச் செய்கிற கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, கொடிய உலகத்தவர்களாகிய உங்களுக்கு, கொடியவளான என்னுடைய கொடி போன்ற இந்தப் பெண்ணின் அழகிய செயல்களை நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 10

கோலம்கொள் சுவர்க்கமும் யானே என்னும்,
கோலம் இல் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்,
கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்,
கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்,
கோலம்கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ,
கோலம்கொள் உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
கோலம்திகழ் கோதை என் கூந்தலுக்கே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'அழகிய சுவர்க்கமும் நானே' என்கிறாள், 'அழகில்லாத நரகமும் நானே' என்கிறாள், 'அழகிய பரமபதமும் நானே' என்கிறாள், 'அழகிய உயிர்களும் நானே' என்கிறாள், 'அழகிய, ஒப்பில்லாத மூலப்பகுதியும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், அழகுநிறைந்த, மேகவண்ணம்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, அழகுள்ள உலகத்தவர்களே, அழகிய மாலையை அணிந்த கூந்தலையுடைய என் மகளைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com