ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

நோன்பு நோற்கவில்லை
ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

நோற்ற நோன்பு இலேன், நுண் அறிவு இலேன் ஆகிலும்,
                                                   இனி உன்னை விட்டு ஒன்று
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய், உனக்கு மிகை அல்லேன் அங்கே.

ஆதிசேஷனைப் பாம்புப்படுக்கையாகக் கொண்ட அம்மானே, வயலில் செந்நெல்லுக்கு நடுவே சேற்றில் செந்தாமரை மலர்கிற ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) எனும் திருத்தலத்திலே வீற்றிருக்கும் எங்கள் தந்தையே, நான் எந்த நோன்பும் நோற்கவில்லை, உன்னை அறியும் நுட்பமான அறிவும் எனக்கில்லை, அதேசமயம், உன்னைப்பிரிந்து ஒரு கணமும் என்னால் இருக்க இயலாது, பெருமானே, ஶ்ரீவரமங்கை நகரிலே நீ என்னை அந்நியமாக வைக்காமல் அருள்புரியவேண்டும்.


******

பாடல் - 2

அங்கு உற்றேன் அலேன், இங்கு உற்றேன் அலேன்,
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்கு உற்றேனும் அலேன், இலங்கை செற்ற அம்மானே,
திங்கள்சேர் மணிமாட நீடு சிரீவர மங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய், தமியேனுக்கு அருளாயே.

இலங்கையை வென்ற அம்மானே, நிலவைத் தொடுமளவு உயர்ந்த மணிமாடங்கள் நிறைந்த ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, சங்கு, சக்கரம் தாங்கியவனே, நான் பரமபதத்தை அடைந்து உனக்குச் சேவை புரியவில்லை, அதனை அடையும் முயற்சியில் இங்கே பூமியிலும் நற்செயல்களைச் செய்யவில்லை, உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையிலே நான் எங்கும் இல்லாதவனாக இருக்கிறேன், பெருமானே, தனியாக இருக்கும் எனக்கு நீயே அருள்புரியவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com