ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

திருவடிகளில் சேர்க்கவேண்டும்
ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன், பாடி அலற்றுவன்,
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக்
                                                                                       கவிழ்ந்திருப்பன்,
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய், செந்தாமரைக்
                                                                                       கண்ணா,
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

பெருமானே, உன்னை எண்ணி நான் அழுவேன், உன்னைத் தொழுவேன், நடனமாடுவேன், பாடுவேன், அலற்றுவேன், என்னைத் தழுவுகின்ற வலிய வினைகளாலே நொந்து, நீ வரும் பக்கத்தை நோக்கி நாணத்தோடு தலைகவிழ்ந்து காத்திருப்பேன், செழிப்பான, ஒளி நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, செந்தாமரைக் கண்ணனே, தொழுகின்ற என்னை உன்னுடைய திருவடிகளில் சேர்க்கவேண்டும், அதற்கான வழியையும் நீயேதான் எனக்குச் சொல்லவேண்டும்.

******

பாடல் - 6

சூழ்கண்டாய் என் தொல்லைவினையை அறுத்து உன்
                                                                                                   அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்று

                                                                                                   இருப்பன்,
வாழ் தொல்புகழார் குடந்தைக் கிடந்தாய், வானோர்
                                                                                                  கோமானே,
யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, அரி ஏறே.

தொன்மையான புகழை உடையவர்கள் வாழ்கிற திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, வானோர் தலைவனே, யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, ஆண் சிங்கமே, என்னுடைய பழைய வினைகளை அறுத்து உன்னுடைய திருவடிகளைச் சேரும் முறையை அறிந்திருக்கிறேன், ஆனாலும், தூர்க்கமுடியாத (சுத்தம் செய்ய இயலாத) இந்திரியங்கள் என்கிற குழிகளைத் தூர்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறேன், இப்படி இன்னும் எத்தனை நாள் நான் உன்னைப் பிரிந்திருப்பேன்? இதிலிருந்து நான் விடுபட ஒரு வழியைச் சொல்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com