ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

குளிர்ந்த திருவல்லவாழ்
ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

நல் நலத் தோழிமீர்காள், நல்ல அந்தணர் வேள்விப்புகை
மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண்
                                                                                            திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டிதன்னை, கனியை, இன் அமுதம்தன்னை,
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே.

சிறந்த அன்பைக்கொண்ட தோழிகளே, நல்ல அந்தணர்கள் செய்யும் வேள்விகளிலிருந்து எழுகின்ற புகை, கருப்பாக மேலே சென்று உயர்ந்த வானத்தை மறைக்கின்ற, குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், வெல்லக்கட்டி, பழம், இனிய அமுதம், என்னுடைய நலத்தைக் கொள்ளைகொள்ளும் சுடர், அவரை என் கண்கள் என்றைக்குக் காணுமோ.

******

பாடல் - 6

காண்பது எஞ்ஞான்றுகொலோ, வினையேன், கனிவாய்
                                                                                                        மடவீர்,
பாண்குரல் வண்டினொடு பசும்தென்றலும்ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப்பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.

கனிபோன்ற வாயைக்கொண்ட பெண்களே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் செழுமையான கடற்கரைச்சோலைகள் உள்ளன, அங்கே வண்டுகள் பண் பாடுகின்றன, எங்கும் பசும்தென்றல் வீசுகிறது, உயரமான கிளைகளுடன் மரங்கள் ஓங்கி நிற்கின்றன, அத்தகைய திருவல்லவாழ் நகரில் எழுந்தருளியிருக்கும் வாமனன், அழகிய பெருமானின் தாமரைபோன்ற மலரடிகளை, பெரிய வினைகளைச் செய்தவளான நான் எப்போது காண்பேனோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com