ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

அவளை வீழ்த்தினாய்
ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

பெய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட
           பிள்ளைத்தேற்றமும், பேர்ந்து ஒர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல்கொள
           நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்கும்களே.

எம்பெருமானே, பூச்சூடிய கூந்தலுடன் ஒரு பேய் (பூதனை) தாய்வடிவில் வந்தது, அப்போது, அவளுடைய முலையில் பாலருந்தி நீ அவளை வீழ்த்தினாய், அந்தச் சிறுபிள்ளை வயதிலேயே உனக்கு என்னவொரு தெளிவு! பின்னர், ஓர் அரக்கன் (சகடாசுரன்) வண்டி வடிவில் வந்தான், அவன் அழிந்துபோகும்படி சிவந்த திருவடிகளால் உதைத்தாய், அந்த இளவீரம் எப்படிப்பட்டது! நீ வெண்ணெயைத் திருடியுண்டாய் என்று பிறர் சொன்னார்கள், உடனே, உன் அன்னை யசோதை கையில் கோலை எடுத்துக்கொண்டு அடிக்க முனைந்தாள். அப்போது, தாமரைபோன்ற கண்களில் நீர் மல்க நீ பயப்படுவதுபோல் நின்ற நிலைதான் எப்படிப்பட்டது! உன்னுடைய இந்தச் செயல்களெல்லாம் என் மனத்தை உருக்குகின்றன!

***

பாடல் - 4

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம்
             புக்கவாறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு
           அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள்குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.

எம்பெருமானே, முப்புரத்தில் அசுரர்கள் பலத்தோடு வாழ்ந்திருந்தபோது, நீ ஒரு கள்ளவேடமிட்டு அங்கே சென்றாய், அந்த அசுரர்களுடன் கலந்து, அவர்களுடைய உள்ளத்தைக் கெடுத்தாய், அவர்களுடைய உயிர் அழியச்செய்தாய், அத்தகைய உன்னுடைய தன்மையும், கங்கையைத் தலையில் தாங்கிய சிவன் உன்னோடு ஒருவனாக விளங்க நிற்பதும் என் உள்ளத்துள் நுழைகின்றன, என் உயிரை உருக்கி உண்ணுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com