ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

வலிய வினைகளை
ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

ஊர் எல்லாம் துஞ்சி, உலகு எல்லாம் நள் இருளாய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஊரெல்லாம் தூங்கிவிட்டது, உலகம் முழுக்க நள்ளிருள், நீர்நிலைகளிலும் சத்தம் அடங்கிவிட்டது, இந்த நீண்ட இரவு இப்படி நீண்டுகொண்டே செல்கிறது. வலிய வினைகளைச் செய்தவளான நான், இந்த நீண்ட இரவில் வாடுகிறேன், உலகங்கள் அனைத்தையும் உண்ட எம்பெருமான், பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டவன், அவன் வர வேண்டும், அப்போதுதான் என் உயிர் பிழைக்கும். ஒருவேளை அவன் வராவிட்டால், என்னைக் காப்பவர்கள் யார்? (யாருமில்லை.)

******

பாடல் - 2

ஆவிகாப்பார் இனி யார்? ஆழ்கடல், மண், விண் மூடி
மாவிகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால்
காவிசேர்வண்ணன், என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே, நீயும் பாங்கு அல்லையே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஆழமான கடல், பூமி, வானம் அனைத்தையும் மூடிக்கொண்டு மாபெரும் விகாரமாக எழுகிறது இந்த இரவு, மிகவும் கொடுமை செய்கிறது, முடியாமல் நீண்டுகொண்டே செல்கிறது, நெய்தல் மலர் போன்ற நிறம்கொண்ட என் கண்ணனோ இன்னும் வரவில்லை, பாவியாகிய என்னுடைய நெஞ்சமே, நீயும் எனக்கு ஆதரவாக இல்லை, இனி, என்னுடைய உயிரைக் காப்பவர்கள் யார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com