ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

என்னுடைய பாவங்கள்
ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்,
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்,
பேர் என்னை மாயாதால், வல்வினையேன் பின் நின்றே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என் தாய்மார்களும் தோழிமார்களும் என்னுடைய நிலைமையைச் சிந்திக்காமல் இந்த நீண்ட இரவில் நன்றாகத் தூங்குகிறார்கள், இப்போது என்னைப் பற்றி ஆராய்ந்து கவலைப்படுகிறவர்கள்/அக்கறை காட்டுபவர்கள் யார்? மேகம் போன்ற திருமேனியைக் கொண்டவனான நம் கண்ணனும் இங்கே வரவில்லை, வலிய வினைகளைச் செய்தவளான என்னுடைய பாவங்கள் என்றைக்கும் இங்கேயே நிற்கும், ஒருபோதும் தீராது.

******

பாடல் - 6

பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்,
முன்நின்று இரா ஊழி கண்புதைய மூடிற்றால்,
மன்நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) விடாமல் எனக்குப் பின்னே வருகிற காதல் நோய் என்னுடைய நெஞ்சத்தைப் பெரிதும் வருத்துகிறது, எனக்குமுன்னே இரவுப்பொழுது என்கிற ஊழிக்காலம் கண்களின் ஒளியை மூடுகிறது, நிலைத்து நிற்கும் சக்கரத்தைக்கொண்ட என் மாயவனும் வரவில்லை, இப்படி நிற்கின்ற என்னுடைய நீண்ட உயிரைக் காப்பவர்கள் இங்கே யார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com