ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8

நுண்ணிய பனித்துளிகளும்
ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கு இருளின் நுண் துளியாய்ச்
சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப்பால வெண் சங்கு, சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன், தெய்வங்கள், என்செய்கேனோ?

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) செறிந்த இருளும், நுண்ணிய பனித்துளிகளும் கொண்ட இந்த இரவு, ஊழிக்காலம்போல் நீண்டுகொண்டே செல்கிறது, தூய்மையான, வெண்மையான சங்கு, சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானும் இங்கே தோன்றவில்லை, தெய்வங்களே, இந்த நிலைமையில் என்னை யார் காப்பார்கள்? தீயைப்போன்ற கொடிய வினைகளைச் செய்த நான் இனி என்ன செய்வேன்?

******

பாடல் - 8

தெய்வங்காள் என்செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய்வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்,
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தெய்வங்களே, இனி நான் என்ன செய்வேன்? ஒரே ஓர் இரவுதான், ஆனால் அது ஏழு ஊழிக்காலங்களைப்போல் நீள்கிறது, மிகைப்படுத்திச் சொல்லவில்லை, நிஜமாகவே அதுதான் நடக்கிறது, இந்த இரவு என்னுடைய உயிரை மெலியச்செய்கிறது, கையிலே சக்ராயுதத்தை ஏந்திய என் கண்ணனும் இங்கே வரவில்லை, அதனால், என்னைத் தழுவுகின்ற குளிர்ச்சியான தென்றல்கூட, எனக்கு வெப்பமாகவே தோன்றுகிறது, என்னை வருத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com