ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

கோபப்படுவது ஏனோ?
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்,
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அன்னைமார்களே, நீங்கள் என்மீது கோபப்படுவது ஏனோ? நம் அழகிய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவன் கையிலிருக்கும் சங்கு, சக்ராயுதம், அவனுடைய தாமரைக்கண்கள், செங்கனிபோன்ற வாய்… இவற்றின்பின்னேதான் என் நெஞ்சம் செல்கிறது. (நான் என்ன செய்வேன்?)

******

பாடல் - 2

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே,
தென்னன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும் வந்து எங்கும் நின்றிடுமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என் நெஞ்சினால் அவனைப் பாருங்கள், (என் நேசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்), அதன்பிறகு, என்னைக் கோபிக்காதீர்கள், தென் திசையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, (எனக்கு வேறு எதைப்பற்றியும் எண்ணமில்லை, வேறு எதுவும் எனக்குத் தெரியவே இல்லை,) எங்கு பார்த்தாலும் அவனுடைய மின்னும் பூணூலும், குண்டலமும், திருமார்பில் உள்ள ஶ்ரீவத்ஸம் என்கிற மறுவும், அணிந்திருக்கிற ஆபரணங்களும், நான்கு திருத்தோள்களும்தான் தெரிகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com