ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

இறைவன் வருகின்ற பக்கம்
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

பக்கம் நோக்கி நிற்கும், நையும் என்று அன்னையரும்
                                                                                                    முனிதிர்,
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்கசோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக்கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, இறைவன் வருகின்ற பக்கத்தையே பார்த்துக்கொண்டு நான் நிற்கிறேன், மனம் வருந்துகிறேன் என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? தகுதியுடைய புகழ் கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் பார்த்தபிறகு, ஒன்றாகச் சேர்ந்த சோதிவடிவமான அவரது கொவ்வைப்பழம் போன்ற வாயும், நீண்ட புருவங்களும், சிறந்த தாமரைக்கண்ணும் பாவியாகிய என்னுடைய உயிரில் தங்கிவிட்டன.

******

பாடல் - 6

மேலும் வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை
                                                                                காணக்கொடாள்,
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான்
                                                                                கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக்கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், 'இவளால் நம் குடும்பத்துக்கு மேலும் கொடுமையான பழி வருகிறது' என்கிறார், நான் நம்பியைக் காணச்செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? சோலைகள் சூழ்ந்த, குளிர்ந்த திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் பார்த்தபிறகு, அவருடைய அழகிய, நீண்ட, கற்பகக்கொடிபோன்ற மூக்கும், தாமரைபோன்ற கண்ணும், கனிபோன்ற வாயும், நீலத் திருமேனியும், நான்கு திருத்தோள்களும் என்னுடைய நெஞ்சில் நிறைந்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com