ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

நிறைவான சோதி
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

நிறைந்த வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை
                                                                             காணக்கொடாள்,
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன்
                                                                            மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமிஅம் கை
                                                                            உளதே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், ‘நம்முடைய குடும்பத்துக்கு இவள் மிகப் பெரிய, கொடுமையான பழியைக் கொண்டுவருகிறாள்’ என்கிறார், நான் நம்பியைக் காணச்செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? சிறந்த புகழையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய நிறைவான சோதி வெள்ளம் சூழ்ந்த, நீண்ட, அழகிய திருமேனியும், அழகிய திருக்கைகளில் சக்ராயுதத்தைத் தாங்கியிருக்கிற திருக்காட்சியும் எனக்குள் நிறைந்துவிட்டதே, இந்தத் திருக்கோலத்தில் அவர் எனக்குள் நின்றுவிட்டாரே.

********

பாடல் - 8

கையுள் நல்முகம் வைக்கும், நையும் என்று அன்னையரும்
                                                                                                     முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
செய்ய தாமரைக்கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன்
                                                                                                     முன்நிற்குமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, நான் என்னுடைய நல்ல முகத்தைக் கைகளில் தாங்கிக்கொண்டு வருந்துகிறேன் என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? மேகங்கள் தவழும் மாடங்களைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய சிவந்த தாமரைக்கண்ணும் கீழிடுப்பும் சிற்றிடையும் கட்டமைப்பான வடிவமும் நன்கு செறிந்து, நீண்ட குழல் தாழ்ந்து விழுகிற திருத்தோள்களும்தான் பாவியான என்முன்னே நிற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com