ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

என்ன செய்வேன்?
ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும்
                                                                                            முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள்முடி ஆதிஆய உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல், பால், அமுதுஆகி வந்து என் நெஞ்சம் கழியானே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தோழிமார்களே, தாய்மார்களே, பெண்களுக்குச் சொல்லப்படுகிற இலக்கணத்தின்படி நான் வீட்டுக்குள்ளேயே இருக்காமல் வெளியே வந்து எல்லார்முன்பும் நிற்கிறேன் என்று நீங்கள் என்மேல் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? நிலைத்துநிற்கும் மாடங்களைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவன்மட்டுமே என் நினைவில் இருக்கிறான், தலையில் அணிந்திருக்கிற நீண்ட திருமுடியில் தொடங்கி எண்ணற்ற அணிகலன்களைக்கொண்ட எம்பெருமான், கரும்பாக, பாலாக, அமுதாக என் நெஞ்சில் வந்து நீங்காமல் தங்கிவிட்டானே.

*******

பாடல்  - 10

கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை
                                                                                   காணக்கொடாள்,
வழுஇல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி
                                                                                  வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும், ஆர்க்கும் அறிவு
                                                                                  அரிதே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், அளவுக்கதிகமான காதலைக் கொண்டவள் இவள் என்கிறார், நான் நம்பியைக் காணச் செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? குற்றமில்லாத புகழைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, தேவர் கூட்டங்கள் கூடி வந்து கை தொழ, சோதி வெள்ளத்தின் நடுவே எழுகின்ற அவனுடைய திரு உருவம் என் நெஞ்சில் எழுகிறது, இதனை யாராலும் அறிய இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com