ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பிரளயத்தின்போது
ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ,
கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கடலுடன் கூடிய இந்த உலகத்தைப் படைத்தது நானே’ என்கிறாள், ‘உலகமாக இருப்பதும் நானே’ என்கிறாள், ‘மகாபலியிடம் உலகத்தைப் பெற்றதும் நானே’ என்கிறாள், ‘பிரளயத்தின்போது இந்த உலகத்தை மேலே எடுத்துவந்து காப்பாற்றியதும் நானே’ என்கிறாள், ‘இந்த உலகத்தைக் காப்பதற்காக அதனை உண்டதும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கடலுடன் கூடிய இந்த உலகத்தின் தலைவன், திருமாலின் ஆவேசம்
இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, உலகத்து மக்களே, கடல் சூழ்ந்த இந்த உலகத்திலே இருக்கிற என் மகள் சொல்லும் இந்தச் சொற்களையெல்லாம் நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 2

கற்கும் கல்விக்கும் எல்லை இலனே என்னும்,
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்,
கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கற்கும் கல்வியின் எல்லைக்குள் நான் இல்லை’ என்கிறாள், ‘கற்கும் கல்வியும் நானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியை ஏற்படுத்துவதும் நானே’ என்கிறாள், ‘கற்கும்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதும் யானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியின் சாரமும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கற்கும் கல்விகள் அனைத்தின் தலைவன், எம்பெருமானின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, நீங்கள் (உலகத்தவர்கள்) இதுபற்றி இனிமேல்தான் கற்கவேண்டும், இந்நிலையில், இவற்றைக் கற்றுக்கொண்ட என் மகள் காண்கிறவற்றை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com