எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

திருமார்பும் திருவாயும்
எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் 1

கருமாணிக்க மலைமேல் மணித்தடம்
தாமரைக் காடுகள்போல்
திருமார்வு, வாய், கண், கை, உந்தி, கால், உடை
ஆடைகள் செய்ய பிரான்,
திருமால், எம்மான், செழுநீர் வயல்
குட்டநாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேர் அன்றிப் பேச்சு இலள், அன்னைமீர்,
இதற்கு என் செய்கேனோ?

(தோழி சொல்கிறாள்)

கருமாணிக்க மலைமேலே அழகிய தடாகத்தில் தாமரைக்காடுகள் பூத்ததைப்போல் எம்பெருமானின் திருமார்பும் திருவாயும் திருக்கண்களும் திருக்கைகளும் திருவுந்தியும் திருவடிகளும் ஆடைகளும் சிவந்து அழகுடன் விளங்குகின்றன, அத்தகைய திருமால், எம்மான், செழுமையான, நீர் சூழ்ந்த வயல்கள் நிறைந்த குட்டநாட்டுத் திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் அரிய மாயன், அவனுடைய பெயரைத்தவிர இவள் வேறு எந்தப் பேச்சையும் பேசுவதில்லை, அன்னைமாரே, நான் என்ன செய்வேன்?


பாடல் 2

அன்னைமீர், இதற்கு என்செய்கேன்? அணி
மேருவின்மீது உலவும்
துன்னு சூழ்சுடர் நாயிறும் அன்றியும்
பல்சுடர்களும்போல்
மின்னு நீள்முடி ஆரம் பல்கலன்
தான் உடை எம்பெருமான்
புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்
புகழும் இவளே.

அன்னைமாரே, அழகிய மேரு மலையில் உலவும் நெருங்கிய, சூழ்ந்த சுடரைக்கொண்ட சூரியனைப்போலவும், அவனைச் சுற்றியிருக்கும் பல சுடர்களைப்போலவும் எம்பெருமானின் மின்னுகின்ற, நீண்ட முடியும், மாலையும், பல ஆபரணங்களும் திகழ்கின்றன. அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் புன்னை மரச்சோலைகள் சூழ்ந்த திருப்புலியூரை இவள் எப்போதும் புகழ்கிறாள், நான் என்ன செய்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com