எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

வேதங்கள், இதிகாசங்கள்
எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8


பாடல் 7

மெல் இலைச் செல்வ வண்கொடிப்
புல்க, வீங்கு இளம்தாள் கமுகின்
மல் இலை கடல்வாழை ஈன் கனி
சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல் இலைத் தெங்கின் ஊடு
கால் உலவும் தண் திருப்புலியூர்
மல்லன் அம் செல்வக்கண்ணன்
தாள் அடைந்தாள் இம் மடவரலே.

மென்மையான இலையையும் வளத்தையும் உடைய வெற்றிலைக் கொடிகள், முதிர்ந்து இளகிய அடிப்பகுதியையுடைய பாக்குமரத்தை அணைக்கின்றன, வளமான இலைகளையுடைய கடல்வாழையின் கனிகள் சூழ்ந்திருப்பதால் எங்கும் மணம் கமழ்கிறது, தென்னை இலைகளுக்கு நடுவே காற்று பரவுகிறது, அத்தகைய குளிர்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் செல்வச்சிறப்பு மிகுந்த கண்ணனுடைய திருவடிகளை இந்தப் பெண் அடைந்துவிட்டாள்.


பாடல் 8

மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச்
சொல்லுகேன்? மல்லைச் செல்வம்
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
நெய் அழல்வான் புகை போய்த்
திடவிசும்பில் அமரர் நாட்டை
மறைக்கும் தண் திருப்புலியூர்
பட அரவு அணையான் தன் நாமம்
அல்லால் பரவாள் இவளே.

வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்ற செல்வங்களை மிகுதியாகப் பெற்றுள்ள வடமொழி அந்தணர்கள் செய்கிற வேள்வியிலே அவர்கள் நெய் விடும்போது, ஓமப்புகை எழுந்து மேலே செல்கிறது, திடமான வானத்தை எட்டுகிறது, அங்குள்ள அமரர் நாட்டை மறைக்கிறது, அத்தகைய குளிர்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருப்பவர், படத்தையுடைய பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டவர், அவருடைய திருப்பெயரைத்தவிர வேறெதையும் இவள் சொல்லுவதில்லை. தாய்மார்களே, இதை நான் உங்களுக்கு எப்படி எடுத்துச்சொல்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com