எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

சூரியன்களின் ஒளியையும்
எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8


பாடல் 7

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும்படியாத் தான் தோன்றி,
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்
புகுதல் அன்றி, அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே.

ஒப்பற்ற, சிறந்த புகழ் எப்போதும் திகழும்படி எம்பெருமான் தோன்றுகிறார்; உலகைப் படைக்க எண்ணும் பெரிய பிரம்மன் என்கிற முதல் வித்தாக மூன்று உலகங்களையும் படைக்கிறார்; அந்த ஒப்பற்ற, பெரிய தெய்வத்தின் தளிர்த் திருவடிகளின்கீழ்ப் புகுவது சிறந்தது. எனினும், அவருடைய அடியவர்களுடன் நன்றாகச் சேர்ந்து அவருடைய புகழைப் போற்றிப் பாடுகிற பாக்கியம் அதைவிடச் சிறந்தது; அந்த இன்பம் நமக்கு நாள்தோறும் வாய்க்கட்டும்.


பாடல் 8

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர்நீர்க் கடலைப் படைத்து, தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி,
நீளும் படர் பூங் கற்பகக் காவும்
நிறை பல் ஞாயிற்றின்
கோளும் உடைய மணிமலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே.

குளிர்ந்த நீரையுடைய கடலைப் படைத்தான் எம்பெருமான், தன்னுடைய ஒப்பற்ற பல திருவடிகள், திருத்தோள்கள், திருமுடிகளைப் பரப்பி அதிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்தான், அப்போது அவனுடைய திருத்தோற்றம், நீண்டு படர்ந்த பூக்கள், கற்பக மரங்களைக்கொண்ட சோலையையும், நிறைந்த பல சூரியன்களின் ஒளியையும் கொண்ட ஒரு மாணிக்கமலையைப்போலே இருக்கிறது; அத்தகைய பெருமானின் அடியவர்களோடு சேரும் பாக்கியம் நமக்குத் தினந்தோறும் வாய்க்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com