பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 10

ஆயர் தலைவனே
பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 10


பாடல் 10

அவத்தங்கள் விளையும், என் சொல் கொள், அந்தோ,
அசுரர்கள் வன் கையர், கஞ்சன் ஏவ,
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்,
தனிமையும் பெரிது உனக்கு, இராமனையும்
உவத்து இலை, உடன் திரிகிலையும் என்று என்று
ஊடு உற என்னுடை ஆவி வேம்ஆல்,
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி,
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே.

சிவந்த கனியைப்போன்ற திருவாயைக்கொண்ட எங்கள் ஆயர் தலைவனே, நீ பசுமேய்க்கச் சென்றால் துன்பம் விளையும், நான் சொல்வதைக் கேள், அடடா, அசுரர்கள், கொடுமையானவர்கள், கஞ்சன் ஏவியபடி அங்கே வந்து திரிகிறார்கள், தவம் புரிகிற முனிவர்கள் மனம் கலங்கும்படி அலைகிறார்கள், அங்கே நீ செல்லவேண்டாம்,  நீயோ யாரையும் துணையாக அழைத்துச்செல்வதில்லை, தனியாகவே திரிகிறாய், பலராமனையாவது உடன் அழைத்துச்செல்லலாம், நீ அதையும் விரும்புவதில்லை, தனிமையையே விரும்புகிறாய், ஆகவே, அந்த அசுரர்களால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எண்ணி என்னுடைய உயிர் வேகிறது, எம்பெருமானே, பரமபதத்தைவிட, உனக்குப் பசு மேய்ப்பதுதான் பிடித்திருக்கிறது. இது என்ன வியப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com