ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

இருளைச் சுருட்டி
ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட
                                           கொழும்சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்,
                                          அன்று, மாயன் குழல்,
விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற
                                         வந்து என் உயிரைக்
கள்கின்ற ஆறு அறியீர் அன்னைமீர்,
                                         கழறா நிற்றிரே.

இது என்ன? உலகத்தையே ஆக்கிரமிக்கின்ற இருளைச் சுருட்டி, அதிலிருந்து நன்கு கொழுத்த இருளைமட்டும் எடுத்துச் செய்த, நல்ல, நீல நிறத்து நூலோ? இல்லை, இது மாயனாகிய எம்பெருமானின் குழல். மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த துளசி மாலையின் நறுமணத்தோடு அவன் வருகிறான், என் உயிரைக் கவர்கின்றான், அன்னையரே, இது உங்களுக்குத் தெரியவில்லை, வீணாக ஏதோ சொல்லிக்கொண்டு நிற்கிறீர்கள்.

****

பாடல் - 10

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய்
                                                         என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர், சுடர்ச்சோதி
                                                         மணி நிறமாய்
முற்ற இம் மூ உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம், அன்னைமீர்,
                                                        நசை என் நுங்கட்கே?

அன்னையரே, ‘ஏன் முற்றத்திலே நிற்கிறாய்?’ என்று கைகளை நெரிக்கிறீர்கள், என்னைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு திட்டுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? எம்பெருமானின் சுடர்த் திருமுடி, சோதி வடிவாக, மணி நிறமாக, இந்த மூன்று உலகங்களிலும் முழுமையாக விரிந்து பரவுகிறது, அந்தத் திருமுடியிலே என் உள்ளம் ஈடுபட்டுவிட்டது, இனி என்மீது நீங்கள் விருப்பம் வைப்பது பயன் தருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com