ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

அனைத்தும் நீயே
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்
                                                                       என் கண்ணா,
துன்னு கர, சரணம்முதலாக எல்லா உறுப்பும்,
உன்னு சுவை, ஒளி, ஊறு, ஒலி, நாற்றம் முற்றும் நீயே,
உன்னை உணர உறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே.

என் கண்ணா, எப்படிப்பட்ட இயல்போடு நீ எவ்வாறு நிற்கிறாயோ, செறிந்திருக்கிற கை, கால் முதலான எல்லா உறுப்புகளும் நீயே, அவற்றால் நினைக்கப்படுகின்ற சுவை, ஒளி, தொடுகை, ஒலி, வாசனை என அனைத்தும் நீயே, உன்னை உணர்ந்துகொண்டால், உன் நுணுக்கங்களுக்கு எல்லையே இல்லை.

***

பாடல் - 10

இல்லை நுணுக்கங்களே இதனின் பிறிது
                                                   என்னும்வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும்
                                                  அருவும் நீயே,
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப! என்
                                                 அச்சுதனே,
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே
                                                 உனக்காம் வண்ணமே.

இதைவிட நுணுக்கமானவை வேறேதும் இல்லை என்கிறபடி பழைமையான, சிறந்த வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் உருவும் அருவும் நீயே, அல்லி இதழையுடைய திருத்துழாய் மாலை அணிந்த மார்பனே, என் அச்சுதனே, உன்னை
அனுபவிக்கிறவர்கள் உன்னைச் சிறப்பாக வர்ணிக்கிறார்கள், நீயும் அந்தத் தன்மையுடனே திகழ்கிறாய். (அன்பர்கள் விரும்பும்படி அனைத்துமாக இருப்பவன் நீ.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com