ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

நினைக்காதவன் நான்
ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

திறத்துக்கே துப்புரவாம் திருமாலின் சீர்
இறப்பு,எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே?

எம்பெருமானை நினைக்காதவன் நான். ஆனால் அவரோ, என்னைத் தன்னாக்கி, என்னாலே தன்னைப் பொருத்தமான பல இனிய கவிகளால் பாடிக்கொண்டார். எப்பேர்ப்பட்ட கருணை இது! எதையும் பொருத்தமாகச் செய்யக்கூடிய சிறப்புடையவர் அந்தத் திருமால். அவருடைய சிறப்பைப் பாட நிகழ்காலம் போதுமா? கடந்தகாலம், எதிர்காலத்தையும் சேர்த்துக்கொண்டு அவரை அனுபவிக்கவேண்டுமே, அப்போதும் திருப்தி உண்டாகாதே.

***

பாடல் - 10

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன்தன்னது, என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்று இல்லை செய்வது இங்கும் அங்கே.

என்னால் தன்னை மென்மையான இனிய கவிகளால் பாடிக்கொண்டார் நம் அப்பன். அவருக்குக் கைம்மாறாக என்ன தரலாம்? என்னுடைய உயிரைத் தரலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த உயிரும் அவருடையதுதானே? (அவர் தந்த உயிரை அவருக்கே திருப்பித்தருவது எப்படி?) ஆகவே, எம்பெருமானுக்குக் கைம்மாறாக என்னால் எதையும் தரமுடியாது, இந்த உலகத்திலும் சரி, அந்த உலகத்திலும் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com