ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

இனிதே வீற்றிருக்கும்
ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2


பாடல் - 1

இன்பம் பயக்க எழில் மலர்மாதரும்
தானும் இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான்,
அன்பு உற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில்
சூழ் திருவாறன்விளை
அன்பு உற்று அமர்ந்து வலம் செய்து கைதொழும்
நாள்களும் ஆகும்கொலோ?

அழகிய தாமரையிலே அமர்ந்திருக்கும் திருமகளுடன் மகிழ்ச்சியாக இனிதே வீற்றிருக்கும் எம்பெருமான், இந்த ஏழு உலகங்களில் எங்கும் இன்பம் நிறையும்படி ஆளுகிறார். அத்தகைய பெருமான் அன்போடு அமர்ந்து உறைகின்ற திருநகரம், அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவாறன்விளை. அங்கே சென்று, அன்போடு அவர் ஆலயத்தை வலம் வந்து கை தொழுவது எந்நாளோ?

***

பாடல் - 2

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி
அகல் இடம் முற்றவும் ஈர் அடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள்
அப்பன் அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள், நீடு
மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து
கைதொழக் கூடும்கொலோ?

அகன்ற இந்த உலகத்தை ஒருவரால் அளக்கவும் முடியுமோ என்கிற சந்தேகமே இல்லாமல், இரண்டே அடிகளில் மொத்த உலகத்தையும் அளக்கும்படி நிமிர்ந்தவர் எம்பெருமான், வாமனனாக அவதாரம் எடுத்த அந்தத் திருக்குறள் அப்பன் அமர்ந்து உறைகிற திருநகரம், வானத்தைத் தொடும்படி உயர்ந்த கொடிகள் நிறைந்த மாடங்களைக் கொண்ட, நீண்ட மதிள் சுவரைக்கொண்ட திருவாறன்விளை. அந்தத் திருத்தலத்துக்குச் சென்று, சிறந்த, மணம் நிறைந்த நீரைத் தூவி, வலம் வந்து கை தொழும் நாள் என்றைக்கோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com