எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6

உயிராகத் திகழ்பவரே
எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

ஆருயிரேயோ, அகல் இடம்முழுதும் படைத்து,
                         இடந்து, உண்டு, உமிழ்ந்து, அளந்த
பேரியரேயோ, பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து,
                        அது கடைந்து, அடைத்து, உடைத்த
சீரியரேயோ, மனிசர்க்குத் தேவர் போலத்
                       தேவர்க்கும் தேவாவோ,
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம், உன்னை
                       நான் எங்கு வந்து உறுகோ?

அரிய உயிராகத் திகழ்பவரே, அகன்ற உலகத்தை முழுவதுமாகப் படைத்து, பிரளயத்தின்போது அதனை இடந்தெடுத்து, உண்டு, பின் உமிழ்ந்து, வாமன அவதாரத்தின்போது திரிவிக்கிரமனாகி அதனை அளந்த பெருமானே, பெரிய கடலைப் படைத்து, அங்கே திருத்துயில் கொண்டு, அதனைக் கடைந்து அமுதமெடுத்து, ராமனாக வந்து அதற்கு அணை கட்டி, உங்கள் வில்லாலே அதனை உடைத்த சிறந்தவரே, மனிதர்களுக்குத் தேவர்களைப்போல் தேவர்களின் தெய்வமே, உலகங்கள் அனைத்துக்கும் ஒப்பற்ற உயிரே, உன்னை நான் எங்கே வந்து காண்பேன்!

***

பாடல் - 6

எங்கு வந்து உறுகோ, என்னை ஆள்வானே,
                                 ஏழ் உலகங்களூம் நீயே,
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே,
                                அவற்று அவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
                                அவையுமோ நீ, இன்னே ஆனால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே, வான் புலன்
                               இறந்ததும் நீயே.

என்னை ஆளும் பெருமானே, ஏழு உலகங்களும் நீ அமைத்துவைத்தவை, அங்கே உள்ளவர்களுக்கான தெய்வங்களும் நீ அமைத்துவைத்தவை, அந்தத் தெய்வங்களுக்குச் செய்யப்படுகிற வழிபாடுகளும் நீ அமைத்துவைத்தவை, உலகங்களுக்கு வெளியே ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவையும் நீ அமைத்துவைத்தவை, காரண நிலையிலே சுருங்கிக்கிடக்கிற சித்து, அசித்துகள் நீ அமைத்துவைத்தவை, வானிலே இருக்கிற, புலன்களுக்கு எட்டாதவையும் நீ அமைத்துவைத்தவை, அப்படியானால், நான் உன்னை எங்கே வந்து சேர்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com