ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

இணை அற்றவனே
ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4


பாடல் - 3

வட்கு இலள் இறையும், ‘மணிவண்ணா’ என்னும்,
வானமே நோக்கும், மையாக்கும்,
‘உட்குஉடை அசுரர் உயிர் எலாம் உண்ட
ஒருவனே’ என்னும், உள் உருகும்,
‘கட்குஇலீ, உன்னைக் காணுமாறு அருளாய்,
காகுத்தா, கண்ணனே’ என்னும்,
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்,
இவள்திறத்து என் செய்திட்டாயே?

(தாய் சொல்கிறார்) என் மகள் சிறிதும் நாணமில்லாதவளாகிவிட்டாள், எப்போதும் ‘மணிவண்ணா’ என்கிறாள், வானத்தைப் பார்க்கிறாள், மயங்குகிறாள், ‘அச்சம் தரும் அசுரர்களின் உயிரையெல்லாம் உண்டவனே, ஈடு, இணை அற்றவனே’ என்கிறாள், உள்ளே உருகுகிறாள், ‘கண்ணால் காண்பதற்கு அரியவனே, நான் உன்னைக் காணும்படி அருள்செய், காகுத்தா, கண்ணா’ என்கிறாள். திண்மையான கொடிகள் கட்டப்பட்ட மதிளால் சூழப்பட்ட திருவரங்கத்துப் பெருமானே, இவளை என்ன செய்துவிட்டாய்!

***

பாடல் - 4

இட்ட கால், இட்ட கையளாய் இருக்கும்,
எழுந்து உலாய் மயங்கும், கை கூப்பும்,
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்,
‘கடல்வண்ணா, கடியை காண்’ என்னும்,
‘வட்ட வாய் நேமி வலங்கையா’ என்னும்,
‘வந்திடாய்’ என்று என்றே மயங்கும்,
சிட்டனே, செழுநீர்த் திருவரங்கத்தாய்,
இவள்திறத்து என் சிந்தித்தாயே?

(தாய் சொல்கிறார்) என் மகள் கை, கால்களை வைத்த இடத்திலிருந்து அகற்றாமல் அமர்ந்திருக்கிறாள், பிறகு எழுந்து நடக்கிறாள், மயங்குகிறாள், கை கூப்புகிறாள், ‘எம்பெருமானை நேசிப்பது சிரமமே’ என்று மூர்ச்சையடைகிறாள், ‘கடல்வண்ணனே, நீ கொடியவன்’ என்கிறாள், ‘வலக்கையில் வட்டமான விளிம்பைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவனே’ என்கிறாள், ‘வந்துவிடு’ என்று சொல்லிச்சொல்லி மயங்குகிறாள். சிறந்தவனே, செழுமையான நீரைக்கொண்ட திருவரங்கத்துப் பெருமானே, இவளைப்பற்றி நீ என்ன நினைத்திருக்கிறாயோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com