ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாரதப்போரை நிகழ்த்தி
ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

ஊண் உடை மல்லர் ததைந்த ஒலி, மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி, விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி, அப்பன்
காண் உடைப் பாரதம் கைஅறைபோழ்தே.

எம்பெருமான், நம் அப்பன் காட்சிக்கு உரிய பாரதப்போரை நிகழ்த்தியபோது, வீரர்கள் அணிவகுத்துப் போர் செய்தபோது, அங்கே என்னென்ன ஒலிகள் கேட்டன, தெரியுமா? நன்கு உண்ட மல்லர்கள் ஒருவர்மீது ஒருவர் மோதி விழுகிற ஒலி கேட்டது, மன்னர்களின் ஆண்மை மிகுந்த படைகள் நடுங்குகிற ஒலி கேட்டது, வானத்திலே பெருமை மிகுந்த தேவர்கள் (போரைக் காண்பதற்காக) வெளிப்படும் ஒலி கேட்டது, இப்படி அற்புதமானமுறையில் பாரதப்போரை நிகழ்த்தினான் பெருமான்.

***

பாடல் - 6

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால், அப்பன்
ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.

எம்பெருமான், நம் அப்பன், அசுரனான இரணியனை ஆழ்ந்த துயரத்துக்கு ஆளாக்கிக் கொன்றான், அப்போது, பகல் பொழுது மெலிந்து புன்மையான செக்கர் (அந்திவானம்) தோன்றியிருந்தது, இரணியனின் ரத்தம் வானத்திலும் எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து எழுந்தது, அந்தக் காட்சி, ஒரு சிங்கம் மலையைக் கீழே போட்டுப் பிளப்பதுபோலிருந்தது. இப்படி அற்புதமானமுறையில் இரணியனைக் கொன்றான் பெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com