எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

ஒன்றை வேண்டிப்
எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

நங்கள் வரிவளை ஆயங்காளோ,
நம்முடை ஏதலர்முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன், எங்கும் காணமாட்டேன்,
சங்கம் சரிந்தன, சாய் இழந்தேன்,
தடமுலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்,
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்
வேங்கடவாணனை வேண்டிச் சென்றே.

அழகிய வளையல்களை அணிந்த என் தோழியரே, நமக்கு எதிராகப் பேசும் பகைவர்களான தாய்மார்கள்முன்பு என்னால் எதையும் சொல்ல இயலவில்லை, வெட்கி நிற்கிறேன், என்னுடைய நிலைமையை உங்களிடமாவது சொல்லலாம் என்று எண்ணுகிறேன், அதற்கும் வழி தெரியவில்லை, வெம்மையான கண்களைக்கொண்ட பறவையான கருடனை வாகனமாகக் கொண்ட பெருமான், நம் தலைவன் வேங்கடவாணனை விரும்பி என் நெஞ்சம் சென்றுவிட்டது, அதனால் என்னுடைய உடல் மெலிந்து சங்கு வளையல்கள் கழன்று விழுந்தன, என்னுடைய மேனி ஒளி மங்கியது, பெரிய மார்பகங்கள் பொன்நிறமாகப் பசலை அடைந்தன, நான் தளர்ந்துவிட்டேன்.

பாடல் - 2

வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை, அந்தோ,
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்,
காண் தகு தாமரைக்கண்ணன், கள்வன்,
விண்ணவர்கோன், நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே.

என்னிடம் ஒன்றை வேண்டிப் பெறுகிற உரிமை கொண்ட என்னுடைய தோழியரே, என்னுடைய நிலைமையை உங்களுக்குமட்டுமாவது சொல்லிவிடலாம் என்று எண்ணுகிறேன், ஆனால், அதை எப்படிச் சொல்வேன்? அடடா, துன்பத்தில் வாடுகிறவளான எனக்கு, அதைச் சொல்லும் வழி தெரியவில்லையே, காணத்தக்க தாமரைபோன்ற கண்களையுடையவன், என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், விண்ணோர் தலைவன், நம் தலைவன், எம்பெருமானைக் கண்டால், அவன் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட சங்கு வளையல்களையும், நிறைவு என்கிற குணத்தையும் திரும்பப்பெறலாம் என்று நான் நினைக்கிறேன், அதற்காக அவனைப் பலகாலமாகத் தேடித்தேடி இளைத்துக்கொண்டிருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com