எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

ஒளிவீசும் சோதியையுடைய
எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6


பாடல் - 5

சொல்லமாட்டேன் அடியேன் உன்
துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இளநாயிறு
இரண்டுபோல் என் உள்ளவா,
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
உபாயம் என்னே, ஆழிசூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
மாநீர்க் கொண்டல் வண்ணனே.

கடலால் சூழப்பட்ட, பெருமையுடைய உலகம்முழுவதையும் உண்ட பெருமானே, நிறைந்த நீரையுடைய மேகத்தின் வண்ணத்தைக்கொண்டவனே,  ஒளிவீசும் சோதியையுடைய உன்னுடைய திருப்பாதங்கள் இரண்டும், எல்லையில்லாத சிறப்பையுடைய இரண்டு இளஞ்சூரியர்களைப்போல் என் உள்ளத்தில் உள்ளன, அதை என்னால் விவரிக்கமுடியவில்லையே, இரண்டு சூரியர்களாக உன்னுடைய திருப்பாதங்கள் உள்ளபோது, துன்பம், அறியாமை போன்ற இருளெல்லாம் என்னிடம் சேர்வதற்கு என்ன வழி?


பாடல் -6

கொண்டல்வண்ணா, குடக்கூத்தா,
வினையேன் கண்ணா, கண்ணா, என்
அண்டவாணா என்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண்தன்மேல்தான் மண்மேல்தான்
விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல்காண
ஒருநாள் வந்து தோன்றாயே.

‘மேகம்போன்ற வண்ணமுடையவனே, குடக்கூத்து ஆடியவனே, தீவினைசெய்தவனான எனக்குக் கண் போன்றவனே, கண்ணனே, பரமபதத்தில் வாழும் எம்பெருமானே’ என்றெல்லாம் நான் உன்னை அழைப்பேன், என்னை ஆளும்படி இறைஞ்சுவேன், எம்பெருமானே, இதைக்கேட்டு நீ எனக்கு அருள்செய்வாய், ஒருநாள், விண்ணிலோ, மண்ணிலோ, விரிந்த நீரையுடைய கடலிலோ, வேறு எங்கோ எனக்குத் திருக்காட்சி தருவாய், தொண்டனான நான் உன்னுடைய திருவடிகளைக் காணும்படி வந்து தோன்றுவாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com