ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 

எம்பெருமானை நினைவுபடுத்துகிறது
ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 

பாடல் - 7

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக்கண், செவ்வாய்,
வாட்டம் இல் என் கருமாணிக்கம், கண்ணன், மாயன்போல்
கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்கள்காள்,
காட்டேன்மின் நும் உரு, என் உயிர்க்கு அது காலனே.

(காதலி சொல்கிறாள்) வளைந்த வில்லோடு மின்னுகின்ற மேகக்கூட்டங்களே, உங்கள் உருவத்தைக் காட்டாதீர்கள், ஏனெனில், அந்தக் காட்சி எனக்கு எம்பெருமானை நினைவுபடுத்துகிறது, என்னைக் கலந்து பிரிந்தவன், அழகிய தாமரைபோன்ற திருக்கண்கள், சிவந்த திருவாயைக்கொண்ட தளர்வில்லாத என் கருமாணிக்கம், கண்ணன், மாயனைப்போல இருக்கிறது, அது எமனைப்போல் என் உயிரை வருத்துகிறது.

பாடல் - 8

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள், கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்,
தயிர்ப் பழஞ்சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல்வளம் ஊட்டினீர், பண்பு உடையீரே.

(காதலி சொல்கிறாள்) இளம் குயில்களே, கண்ணனின் திருப்பெயரைச் சொல்லாதீர்கள், அது எமனைப்போல் என்னுடைய உயிரை வருத்தும் என்று நான் உங்களைக் கெஞ்சினேன், ஆனால் நீங்களோ அவன் பெயரையே சொல்லி என்னைக் கொல்கிறீர்கள், பழைய சோற்றில் தயிர் ஊற்றிப் பிசைந்து தந்து, பால் சோற்றை ஊட்டி, எம்பெருமானின் திருநாமங்களைப் பேசுவதற்கு உங்களைப் பழக்கிய எனக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? நன்றாயிருக்கிறது உங்கள் பண்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com