தமிழ் தேய்ந்த கதை

தமிழ் தேய்ந்த கதை- இல.குணசேகரன்; பக்.364; ரூ.230; பொய்யாமொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்-4; )04362 - 244017.

தமிழ் தேய்ந்த கதை- இல.குணசேகரன்; பக்.364; ரூ.230; பொய்யாமொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்-4; )04362 - 244017.
தமிழ்த்தாயைத் தற்செயலாகச் சந்திக்கும் ஒரு சாமானியன் தமிழ்மொழி குறித்தும் தமிழிலக்கணம் குறித்தும் இலக்கியம் குறித்தும் தன் மனதிலிருக்கும் ஐயங்களைக் கேட்பதும், தமிழ்த்தாய் அவற்றுக்கு விரிவான விடையளித்து அவனைத் தெளிவிப்பதுமே இந்நூலின் உள்ளடக்கம்.
அகத்தியர் பொதிகை மலையில் தமிழ் வளர்த்ததில் தொடங்கி, திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒüவை, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சேக்கிழார், கம்பர், வள்ளலார் , பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகள் மட்டுமல்லாமல், பிற சமயத்தவர் தமிழுக்கு அளித்துள்ள பங்களிப்புகளையும் தமிழ்த்தாய் கூற்றாக நூலாசிரியர் திறம்பட விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது கருத்துக் கருவூலமாக இருக்கும் தமிழிலக்கியங்களை முற்றாகப் படித்து உணராமலும், சில குழுவினர் உணர்ந்திருந்தாலும், அவற்றின் உண்மைப் பொருளை உரைக்காமல் தன்னலம் கருதி அவற்றைத் தூற்றுவதுமாக இருப்பது குறித்து தமிழ்த்தாய் வருத்தமுற்று, அவர்களுக்கு உணர்த்தும் விதமாக பல மேற்கோள்களோடு உண்மையை நிறுவுகிறார்.
குறிப்பாக திருவள்ளுவர் இணை நலம் என்று கூறாமல் துணை நலம் என்று கூறியது, கணவனைத் தொழும் பெண் பெய்யெனில் பெய்யும் மழை என்று கூறியது, பெண்கள் தாலி அணியும் வழக்கம் இல்லாத காலத்தில் கண்ணகி அணிந்திருந்த மங்கல அணி எப்படி தாலியாக இருக்க முடியும், பெரிய புராணத்தில் பெண்ணடிமைத்தனம் இருப்பதாகச் சிலர் கூறுவது, வள்ளலார் வடமொழி எதிர்ப்பாளர் என்று பலரும் கூறி வந்தது - இவை எல்லாவற்றுக்கும் மறுக்க முடியாத தரவுகளோடு - அதுவும் பிற தமிழிலக்கியங்களிலிருந்தே - தமிழ்த்தாய் மறுமொழி உரைப்பது பலருடைய கண்களைத் திறக்கும்.
ஒருவகையில் இந்நூல், தமிழிலக்கிய வரலாறே. ஆயினும் இடையிடையே தற்கால சமூக, அரசியல் நையாண்டிகளைத் தவிர்த்திருந்தால், இந்நூலின் கனம் இன்னும் கூடியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com