மாணிக்க மணிமாலை

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்) - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.232; ரூ.100; செம்மூதாய் பதிப்பகம், 19/எஃப் 2, ரூபி ரெஸிடென்ஸி, நர்மதா தெரு வழி, சந்திரன் நகர், இரும்புலியூர், கிழக்குத
மாணிக்க மணிமாலை

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்) - இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.232; ரூ.100; செம்மூதாய் பதிப்பகம், 19/எஃப் 2, ரூபி ரெஸிடென்ஸி, நர்மதா தெரு வழி, சந்திரன் நகர், இரும்புலியூர், கிழக்குத் தாம்பரம், சென்னை-59.
பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 
சேரமான் பெருமாள் நாயனாரின் "திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். "உயிர்கள் எல்லாம் பெண்மையன; மூலப் பரம்பொருளான இறைவன் ஒருவனே ஆண்மையன். அப்பரமனைக் கண்ட உயிர்கள் எல்லாம் அவனிற் கலக்க அங்கலாய்க்கும் செய்தியே இந்த உலா' என்று ஞான உலாவின் சாராம்சத்தை நூலாசிரியர் தெளிவாக உரைத்திருப்பது சிறப்பு. 
பாரதியின் தேசிய கருத்துகள், பெண்ணியச் சிந்தனைகள் பற்றி பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்திருக்கும் நிலையில், பாரதியின் தமிழ் மொழிப்பற்றை எடுத்துக்காட்டும் கட்டுரை நூலாசிரியரின் புதிய சிந்தனையைக் காட்டுகிறது. 
சுதந்திரப் போராட்டம் மற்றும் இதழியல் வரலாற்றில் தினமணியின் பங்களிப்பு பற்றியும், கம்பனின் புகழ் பரப்புவதில் தினமணியின் பங்கு பற்றியும், சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதில் தினமணி அளித்த பங்கினைப் பற்றியும் 
எழுதப்பட்ட கட்டுரைகள் நூலுக்கு அணிசேர்க்கின்றன.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மணிவாசகர், சேக்கிழார் ஆகியோரைப் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும், இவர்கள் அனைவருடைய வாழ்வியல், இறையியல் சிந்தனைகளை எடுத்துரைப்பனவாகவே அமைந்துள்ளன. ஆன்மிக உலகுக்கு ஒளி பாய்ச்சும் அரிய நூலாக இருக்கும் இந்நூல், தமிழின் மீதும், ஆன்மிகத்தின் மீதும் பற்றுக் கொண்ட அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com